

‘பொதுத்துறை வங்கிகளில் அதிக கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத முதல் 100 பேரின் பட்டியலை வெளியிட வேண்டும்’ என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய திறந்த மடலில் சீதாராம் யெச்சூரி் கூறியிருப்பதாவது:
வங்கிகளில் இருந்து அதிக அளவுக்கு கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்களிடம் இருந்து அத்தொகையை வசூலிக்கும் நடவடிக்கையை தொடங்க வேண்டும். அதிக கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியல் ரிசர்வ் வங்கி, மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்திடம் ஏற்கெனவே உள்ளது. இதில், முதல் 100 பேரின் கடன் பாக்கித் தொகை மற்றும் பெயர் உள்ளிட்ட விவரப் பட்டியலை பொது மக்கள் பார்வைக்காக வெளியிட வேண்டும்.
கொடுக்கப்பட்ட கடன் அனைத் தும் திருப்பி வசூல் செய்யப் படும் வரை, பொதுமக்களின் பணத்தை, அரசுத் துறை வங்கிகள் கையாள அனுமதிக்கக் கூடாது. இதைச் செய்ய மறுத்தால், அரசின் சலுகைகளை சார்ந்து வாழும் முதலாளித்துவவாதிகளின் ஊதாரித்தனமான செலவுகளுக்கு ஏழை பொதுமக்களின் பணத்தை மத்திய அரசே சுரண்டித் தருவதாக அர்த்தமாகிவிடும்.
கடந்த மார்ச் மாத இறுதி நிலவரப்படி, நமது வங்கிகளால் கடனாக வழங்கப்பட்ட ரூ.8,55,551 கோடி திரும்பப் பெறப்படாமல் உள்ளது.
கடன் பெற்றவர்களின் பொறுப் புணர்வு மற்றும் அதை வசூல் செய்வதற்காக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை கள் என்ன என்பதையெல்லாம் கவனிக்கும்போது, அந்த தொகை திரும்ப வசூலிக்கப்படாது என்றே தோன்றுகிறது.
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாதவர்களில் முக்கியமான வர்கள் கார்ப்பரேட் முதலாளிகள். இவ்வாறு மோசடி செய்யப்படும் பணம், ஒவ்வொரு இந்திய குடி மகனும் உழைத்துச் சம்பாதித்து, சேமிப்பதற்காக வங்கியில் போட்டு வைத்த பணம் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
நாட்டில் உள்ள பெரிய 10 கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும், பல்வேறு பொதுத் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ரூ.7 லட்சம் கோடி அளவுக்கு கடன் பாக்கியை செலுத்தாமல் வைத்துள்ளன. இதை வசூலிக்க அரசு சார்பில் எந்தவித நிர்பந்தமும் தரப் படவில்லை.
கடன்தொகையை திருப்பிச் செலுத்தாமல் அவர்களும் வழக்கம் போல சுகபோக வாழ்க்கையை எவ்வித குறையும் இல்லாமல் தொடருகின்றனர். ஆனால், கடன் வாங்கிய ஏழை விவசாயி களிடம் கால்நடைகளை பிடுங்கு வதும், ஜப்தி நடவடிக்கை மேற் கொள்வதிலும் அரசு தீவிரம் காட்டுகிறது.
இவ்வாறு யெச்சூரி குறிப் பிட்டுள்ளார்.