

உள்நாட்டு பாதுகாப்பு ஆபத்தான சூழலில் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
ஆனால், தீவிரவாத அச்சுறுத்தலை மட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தாம் அஞ்சலி செலுத்துவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் விமான தளத்தில் இருந்த முக்கிய ஆயுதங்களின் பாதுகாப்பு குறித்தும் ஆழ்ந்த கவலை உள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான உளவுத்துறை தகவல்களை கருத்தில் கொண்டு, நாட்டு மக்களையும், அரசின் முக்கியமான சொத்துக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என நான் மிகவும் நம்புகிறேன்.
பதன்கோட் தாக்குதலில் உயிரிழந்த 7 வீரர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். பாதுகாப்பு படையினரின் தியாகம் மற்றும் வீரம் வணங்க வேண்டிய ஒன்றாகும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.