

ஆதார் அட்டை கட்டாயமில்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் தேவை என்ற மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மனு அக்டோபர் 8ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் முன்னர் பிறப்பித்திருந்த உத்தரவில் மாற்றம் தேவை. இந்த உத்தரவானது பல்வேறு அரசு நலத் திட்டங்களை அமலுக்கு கொண்டு வருவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று சில மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. மகாராஷ்டிராவில் திருமணத்தை பதிவு செய்ய ஆதார் அட்டை கட்டாயம் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சொத்து தொடர்பான பத்திர பதிவுகளுக்கும் ஆதார் அட்டை வேண்டும் என்று சில மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன. இது போன்ற கெடுபிடிகளை எதிர்த்து பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்: அரசு சலுகைகளை பெற ஆதார் அட்டையை கட்டாயப்படுத்த கூடாது. ஆதார் அட்டை விருப்பப்படுபவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியே றியவர்களுக்கு ஆதார் அட்டையை வழங்க கூடாது. அப்படி வழங்கினால், அது அவர்கள் இந்தியாவில் தங்கியிருப்பதை சட்டபூர்வமாக ஆக்கிவிடும் என்று தெரிவித்திருந்த்னர்.
அப்போது மத்திய அரசின் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் மத்திய அரசை பொறுத்தவரை ஆதார் அட்டையை பெறுவது குடிமக்களுக்கு கட்டாயமில்லை. விருப்பப்பட்டவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றுதான் அரசு கூறுகிறது என தெரிவிக்கப்பட்டது.