

திருப்பதியில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி 2030-ல் இந்தியா அறிவியல் தொழில்நுட்பத்தில் 3-வது சிறந்த நாடாக உயரும் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் உரையிலிருந்து சில...
இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள சிறந்தவர்கள் மற்றும் பிரகாசமானவர்கள் அறிவியலில் சிறந்து விளங்க வாய்ப்புகள் கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும். நம் முன்னணி அறிவியல் நிறுவனங்களை பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து பிரிவினருக்கும் தொடர்பு ஏற்படுத்துமாறு செய்ய வேண்டும். பள்ளி மாணவர்களிடையே கருத்துகளின் சக்தியையும் புதுமை பற்றிய கருத்துகளையும் விதைக்க வேண்டும். இதுதான் இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
விஞ்ஞானிகளுக்கு அரசு முழு ஆதரவளிக்க கடமைப்பட்டுள்ளது. நிதி ஆயோக் நாட்டுக்காக முழுமையான அறிவியல் தொழில்நுட்ப தொலைநோக்குப் பார்வையை உருவாக்கி வருகிறது. கடந்த அறிவியல் மாநாட்டில் வெளியிட்ட 2035 அறிவியல் தொலைநோக்குப் பார்வை தற்போது 12 முக்கிய தொழில்நுட்ப துறைகளுக்கான விரிவான வரைபடமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய தீபகற்பத்தை சுற்றியுள்ள நதிநீர், மற்றும் பரந்த கடற்கரைப் பகுதிகள் ஆகியவை 2.4மில்லியன் சதுர கிமீ பொருளாதார மணடலத்தை வழங்குகிறது. நீடித்த எதிர்காலத்திட்டத்தில் கடல்பொருளாதாரம் முக்கிய பரிமாணமாக விளங்குகிறது. புவி அறிவியல்கள் அமைச்சகம் ஆழ்கடல் ஆய்வில் இந்த ஆதாரங்களை பொறுப்பான முறையில் பயன்படுத்தும் பணியை ஆய்வு செய்து வருகிறது.
தொழில்நுட்ப அறிவை புதுமைகளைக் கண்டுபிடிப்பதற்கான கருவிகளாக மாற்ற வேண்டும். 2030-ம் ஆண்டில் இந்தியா அறிவியல் தொழில்நுட்பத்தில் 3 டாப் நாடுகள் பட்டியலில் இருக்கும். நம் மக்களின் அதிகரிக்கும் தேவைப்பாடுகளுக்கு ஏற்ப விஞ்ஞானம் வளர்ச்சிபெறுதல் அவசியம்.
இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படவேண்டிய துறை சைபர் பிசிக்கல் சிஸ்டம்ஸ் ஆகும். ஏனெனில் இதுவரை கண்டிராத சவால்களை இந்த்த் துறை கொண்டுள்ளது. ரோபோக்கள் மற்றும் டிஜிட்டல் உற்பத்தியில் இதற்கு பெரிய வாய்ப்பு உள்ளது. இன்று நாம் செய்யும் முதலீடுகளிலிருந்தே எதிர்கால நிபுணர்கள் தோன்றுவார்கள். நம் சமூகத்திற்கு இத்தகைய ஆற்றலதிகாரத்தைப் பெற செய்வதற்காக அயராது உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு தேசம் நன்றிக் கடன் பட்டுள்ளது. நம் நாட்டின் பாதுகாப்பு தொலைநோக்கிற்கு விஞ்ஞானிகளின் பங்களிப்பு அளப்பரியதாகும்.
இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.