

ஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிகழ்வுக்குக் காரணமாக இருந்ததாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை(எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது.
டெல்லியில் ஜேஎன்யுவில் படித்த தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் கடந்த திங்கட்கிழமை தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டது. தற்கொலைக் குறிப்போ, காரணமோ எதுவும் சம்பவ இடத்தில் இல்லாத நிலையில், அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் பாகுபாட்டுக்கு எதிராக அவர் எழுதியிருந்த பதிவுகள் சர்ச்சையைக் கிளப்பின.
இது ஒரு மர்ம மரணம் எனக் கூறி, அவரது தந்தையான ஜீவானந்தம் டெல்லி போலீஸிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில், முத்துக்கிருஷ்ணனின் மரணம் தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக முத்துக்கிருஷ்ணனின் ஃபேஸ்புக் பதிவுகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. தற்போது மரணத்துக்கு மூன்று நாட்கள் முன்னதாகவும், அவர் பதிவிட்ட காலகட்டத்திலும் அவரின் செயல்பாடுகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.