மக்கள் விரோத மோடி அரசு: ஒரே மேடையில் நிதிஷ், லாலு குற்றச்சாட்டு

மக்கள் விரோத மோடி அரசு: ஒரே மேடையில் நிதிஷ், லாலு குற்றச்சாட்டு
Updated on
2 min read

மக்கள் விரோத கொள்கைகளை பிரதமர் நரேந்திர மோடி அரசு கடைப்பிடித்து வருவதாக, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் குற்றம்சாட்டினர்.

பிஹார் தலைநகர் பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை ஆளும் கூட்டணி சார்பில் பிரமாண்ட பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் முதல்வர் நிதிஷ் குமார் பேசும்போது, "மக்கள் விரோத கொள்கைகளை பிரதமர் நரேந்திர மோடி அரசு கடைப்பிடித்து வருகிறது. டெல்லி போலீஸ் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அங்கு குற்றங்களின் எண்ணிக்கை அதிகம். டெல்லியுடன் ஒப்பிடும்போது பிஹாரில் குற்ற நிகழ்வுகள் குறைவு. நிலம் கையகப்படுத்தும் அவசர சட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி பின்வாங்கியுள்ளார். இது மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றி.

பிஹாரில் காட்டாட்சி நடப்பதாக மோடி குற்றம் சாட்டுகிறார். உண்மையில் இங்கு நல்லாட்சி நடக்கிறது. புதிய பிஹாரை நாங்கள் உருவாக்குவோம். இனி வரும் காலத்தில் பிஹாரில் இருந்து யாரும் வெளிமாநிலங்களுக்கு வேலைதேடி செல்ல வேண்டிய அவசியம் இருக்காது" என்றார்.

ராஷ்டிரீய ஜனாதா தளத் தலைவர் லாலு பிரசாத் பேசும்போது, "பிற்படுத்தப்பட்ட தலைவர் ஒன்றிணைந்திருப்பதை பாஜகவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ளது. பிரதமர் மோடி பிஹாருக்காக புதிதாக எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை. பழைய திட்டங்களைப் புதிதுபோல காட்டியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை மத்திய அரசு மறைக்கிறது. இதில் உள்நோக்கம் உள்ளது" என்றார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில், பிரதமர் மோடியின் முயற்சி மக்களின் சக்தி முன்பு தோல்வி அடைந்துவிட்டது என்றார். | முழு விவரம்:> நிலச் சட்டம்- மக்கள் சக்தி முன்பு மோடிக்கு தோல்வி: சோனியா |

பிஹார் சட்டப்பேரவையின் பதவி காலம் நவம்பர் 29-ம் தேதி நிறைவடைகிறது. அங்கு அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலை முன்னிட்டு ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை இணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளன. பாஜக கூட்டணியில் லோக் ஜனசக்தி, முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி ஆகியோர் இணைந்துள்ளனர்.

இரு கூட்டணிகளும் இப்போதே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் பிஹார் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ரூ.1.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கி சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். மறுபுறம் முதல்வர் நிதிஷ்குமார் ரூ.2.70 லட்சம் கோடியிலான திட்டங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மரபணு மாதிரி பெற 80 கவுன்ட்டர்கள்:

பிஹார் மாநிலம், பாட்னா நகரில் உள்ள காந்தி மைதானத்தில் ஜனதா பரிவார் கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வந்தவர்களிடம் மரபணு (டிஎன்ஏ) மாதிரி பெறுவதற்காக மைதானத்தை சுற்றிலும் 80 கவுன்ட்டர்களை ஐக்கிய ஜனதா தளம் திறந்திருந்தது.

விருப்பம் உள்ளவர்கள் தங்கள் தலைமுடி மற்றும் நகத்தின் பாகத்தை வழங்குவதற்காக பிளாஸ்ட் பை மற்றும் கடித உறை இந்த கவுன்டர்களில் வழங்கப்பட்டது. கடித உறையில் பிரதமரின் டெல்லி முகவரி அச்சிடப்பட்டிருந்தது. மாதிரி அளிப்பவர்கள் தங்கள் முகவரியை எழுத இதில் இடம் விடப்பட்டிருந்தது.

மேலும் உறையின் மீது, "பிஹாரி என்பதின் நான் பெருமிதம் கொள்கிறேன். எனது மரபணுவின் எந்தத் தவறும் இல்லை. உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் சோதித்துக் கொள்ளலாம்" என்றும் எழுதப்பட்டிருந்து.

நிதிஷ்குமாரின் மரபணுவில் ஏதோ கோளாறு உள்ளது என்ற பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்திருந்தார். "இந்த வார்த்தைகளை திருப்பப் பெறு" என்ற பிரச்சாரத்தின் கீழ் ஐக்கிய ஜனதா இந்த கவுன்டர்களை திறந்திருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in