புதிய சமூக ஊடகக் குழுக்களில் கட்சியை விரிவுபடுத்துங்கள்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை

புதிய சமூக ஊடகக் குழுக்களில் கட்சியை விரிவுபடுத்துங்கள்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை
Updated on
1 min read

புதிய சமூக ஊடகக் குழுக்களில் கட்சியை விரிவுபடுத்தும் வகையில் ராஜ்யசபா எம்.பி.க்கள் செயல்படவேண்டும் என்றும் பாஜக அரசின் சாதனைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்றும் மோடி, பாஜக ராஜ்யசபா உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

பாஜக தலைவர் அமித் ஷா, கட்சியின் ராஜ்யசபா எம்.பி.க்களின் செயல்பாடு குறித்து அறிந்துகொள்ள ஏற்படுத்திய சந்திப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக ராஜ்யசபா எம்.பி.க்கள் சந்திப்பு டெல்லியில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த சந்திப்பில் பேசிய அமித் ஷா, ''ராஜ்யசபா எம்.பி.க்கள் அனைவரும், கடந்த முறை வெற்றிவாய்ப்பை இழந்த மக்களவைத் தொகுதிகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். எந்த மக்களவையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அங்கே அடுத்த பொதுத்தேர்தல் வெற்றியை அவர்கள் உறுதிசெய்ய வேண்டும். கட்சி நிகழ்ச்சிகளிலும், வளர்ச்சித் திட்டங்களிலும் பங்குகொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், "மூத்தோர்கள் நிறைந்த அவைக்கு, இளம் எம்.பி.க்களை அனுப்பி பாஜக முன்மாதிரிக் கட்சியாகத் திகழ்கிறது; இது நிச்சயம் புதுப்பிக்கப்பட்ட, ஆற்றல் மிகுந்த செயலாக்கத்தை ஏற்படுத்தும் என்று மோடி கூறினார்.

மாநிலப் பிரச்சினைகளைப் பேசுங்கள்

மேலும் பேசிய பிரதமர், ராஜ்ய சபா எம்.பி.க்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்துத் தயக்கமின்றிப் பேச வேண்டும். அங்கு பலவாறாகப் பிரிந்துகிடக்கும் சமூகத்தைச் சென்றடைந்து அவற்றைக் கட்சியோடு இணைக்கவேண்டும்.

நீங்கள் நிறைய பகுத்தாய்வு செய்யுங்கள், தகுந்த தேவையான கேள்விகளை எழுப்புங்கள். உங்களின் பார்வையை விசாலமாக்குங்கள் என்று கூறினார்" எனத் தெரிவித்தார்.

52 ராஜ்யசபா எம்.பி.க்கள் கலந்துகொண்ட சந்திப்பில் அமித் ஷா தொடக்க உரையாற்ற, அமித் மாளவியா தலைமையில் தகவல் தொழில்நுட்பக்குழு சிறப்பு உரையாற்றியுள்ளது. அதில் சமூக ஊடகங்களின் பயன் என்ன, அவற்றை எவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்த முடியும் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in