

இந்திய விமானப் படையின் 24வது தளபதியாக அரூப் ராகா (59) நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
விமானப்படை தளபதியாக இருந்த என்.ஏ.கே.பிரவ்னி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, துணைத் தளபதியாக இருந்த அரூப் ராகா, பதவி உயர்வு பெற்று தளபதியாக பொறுப்பேற்றுள்ளார்.
டெல்லியில் விமானப்படை தலைமை அலுவலகமான வாயு பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராகாவிடம் என்.ஏ.கே. பிரவ்னி பொறுப்புகளை ஒப்படைத்தார்.
விமானப்படை புதிய துணைத் தளபதி ஆர்.கே.ஷர்மா, உதவி தளபதி சுகுமார் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் அப்போது உடனிருந்தனர்.
1954ம் ஆண்டு, டிசம்பர் 26ம் தேதி பிறந்தவரான அரூப் ராகா, 1974ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி விமானப் படையில் சேர்ந்தார். விமானப் படையில் பல்வேறு பொறுப்புகள் வகித்த இவர், சென்னை, தாம்பரத்தில் உள்ள விமானப் படை பயிற்சி முகாமிலும் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். விமானப் படை தளபதியாக இவர் 3 ஆண்டுகளுக்கு நீடிப்பார்.
பதவியேற்ற பின் அரூப் ராகா நிருபர்களிடம் கூறுகையில், “விமானப் படை நவீனமயமாகி வரும் இந்த வேளையில், வீரர்களின் போர்த்திறனை மேம்படுத்த முழு முயற்சி எடுக்கப்படும். குறிப்பிட்ட காலவரையறைக்குள் நவீன கருவிகளை படையில் சேர்க்க சிறப்பு கவனம் செலுத்தப்படும். எல்லையில் ஊடுருவலுக்கு எதிரான பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைக்கு விமானப் படை தொடர்ந்து துணை புரியும்” என்றார். - பி.டி.ஐ.