Published : 13 Oct 2014 12:34 PM
Last Updated : 13 Oct 2014 12:34 PM

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகை மீது அக்.29-ல் உத்தரவு

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக, மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோர் மீதான சிபிஐ குற்றப்பத்திரிகை தொடர்பான உத்தரவு, இம்மாதம் 29-ம் தேதி பிறப்பிக்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.

இது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, இந்த விவகாரத்தில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், அக்டோபர் 29-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

முன்னதாக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத் தலைவர் அனந்த கிருஷ்ணன் அந்நிறுவனத்தை வாங்க உதவியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து 2011-ல் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவன பங்குகளில் ரூ.650 கோடியை மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதை சிபிஐ கண்டுபிடித்தது. பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு சிபிஐ, இந்த வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

மாறன் சகோதரர்கள் தவிர மேலும் 6 பேர் மற்றும் சன் டைரக்ட் டி.வி. பிரைவேட் லிமிடெட் உட்பட 4 நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. 6 தனிநபர்கள் தவிர சன் டைரக்ட் டிவி பிரைவேட் லிமிடட் உள்ளிட்ட 4 நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றங்கள் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள தனிநபர்கள், நிறுவனங்கள் மீது சாட்டப்பட்டுள்ளன.

இந்தக் குற்றப்பத்திரிகை மீதான விசாரணையின்போது, 'ஏர்செல் நிறுவனத்தை தயாநிதி மாறன் மிரட்டி விற்பனை செய்ய வைத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன' என்று சிபிஐ தரப்பு வாதிட்டது. இதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

'கடந்த 2004-06 காலகட்டத்தில் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்தின் உரிமங்களுக்கான விண்ணப்பங்களை காரணமே இன்றி நிலுவையில் வைத்தார். அதன் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி, அதன் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய வைத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. நிறுவனம் கைமாறிய பிறகு உரிமம் வழங்கப் பட்டது. இதில் பாதிக்கப்பட்டது சிவசங்கரன்தான்' என்று சிபிஐ தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x