Last Updated : 02 Dec, 2013 08:29 AM

 

Published : 02 Dec 2013 08:29 AM
Last Updated : 02 Dec 2013 08:29 AM

டெல்லி தேர்தல்: கெஜ்ரிவால் கட்சியால் யாருக்கு இழப்பு?

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், முதன்முறையாக களம் இறங்கியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியால் இழப்பு காங்கிரஸுக்கா அல்லது பாஜகவுக்கா என்று பரபரப்பு நிலவுகிறது.

டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி செய்துவரும் காங்கிரஸ் கட்சி சுமார் 36 சதவிகித வாக்குகளைப் பெற்று வந்துள்ளது. எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு காங்கிரஸைவிட மூன்று சதவிகித வாக்குகள் குறைவு. எனினும், இரு கட்சிகளுமே யாருடனும் கூட்டணி வைக்காமல் 70 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இவ்விரு கட்சிகளையுமே முக்கிய எதிரியாகக் கருதும் ஆம் ஆத்மி கட்சியும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. ஆனால், காங்கிரஸும் பாஜகவும் ஆம் ஆத்மியைக் கண்டு உள்ளூர பயந்தாலும், வெளிப்படையாகக் கூறுவதில்லை.

இதுபற்றி டெல்லி பாஜக தேர்தல் பொறுப்பாளரான நித்தின் கட்கரியிடம் தி இந்து சார்பில் பேசியபோது, "ஆம் ஆத்மி கட்சிக்கு ஊடகங்கள் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. எங்களுக்கு காங்கிரஸ்தான் முக்கிய போட்டி யாளரே தவிர, நான்கு பேரைக் கொண்ட கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது" என்றார்.

முதல்வர் ஷீலா தீட்சித் கூறுகையில், "ஒவ்வொரு முறையும் புதிய கட்சிகள் போட்டியிட்டு தோல்வி அடைகின்றன. அதுபோல்தான், ஆம் ஆத்மி கட்சியும் இந்த முறை புதிதாகப் போட்டியிடுகிறது. அது படுதோல்வி அடையும்" என்றார்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸும் பாஜகவும் தேர்தல் ஆணையத்தில் பல புகார்களைக் கொடுத்துள்ளன. ஆனால், டெல்லியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ், சமாஜவாதி மற்றும் கம்யூனிஸ்டு உட்பட எந்த கட்சி மீதும் இரு கட்சிகளுமே பெரிய அளவில் புகார் அளித்ததில்லை.

ஆம் ஆத்மியின் தோற்றம்:

நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்ட அண்ணா ஹசாரேவுடன் நெருக்கமாகப் பணியாற்றியவர் அரவிந்த் கெஜ்ரிவால். இதற்காக மத்திய அரசுப் பணியிலிருந்து விலகினார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பல ஊழல்களை வெளிப்படுத்தி, அதனால் கிடைத்த செல்வாக்கையும் பயன்படுத்தி ஆம் ஆத்மி (பாமர மனிதன்) கட்சியைத் துவக்கி, முதன்முறையாக டெல்லியில் தேர்தலை சந்திக்கிறார்.

காங்கிரஸின் சாதகம்:

டெல்லியில் உபி மற்றும் பீகார் மாநில வாக்காளர்கள் மூன்றில் ஒரு பங்கு உள்ளனர். இவர்களுடன் முஸ்லிம் மற்றும் தலித்களின் ஒரு பகுதியினர் காங்கிரசின் நிரந்தர வாக்காளர்களாக உள்ளனர். காங்கிரசை மிரட்டி வந்த வெங்காய விலையும் தற்போது குறைந்து விட்டது.

பாஜக செல்வாக்கு:

சீக்கியர்கள் மற்றும் உயர் வகுப்பினரின் வாக்குகள் பாஜகவுக்கு நிரந்தரமாக உள்ளன. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் டாக்டர் ஹர்ஷவர்தனுக்கு ஊழலற்றவர் என்ற பெயர் உள்ளது. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியின் தீவிர பிரசாரம் நடுத்தர வகுப்பினரிடையே தாக்கத்தை ஏற்படுத்தலாம். யாருக்கு இழப்பு இந்நிலையில், கெஜ்ரிவால் கட்சியால் 2 முக்கிய கட்சிகளில் யாருக்கு இழப்பு ஏற்படும் என்ற கணக்கு இன்னும் சரிவரக் கிடைக்கவில்லை. எனினும், வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்ந்திருக்கும் இளைஞர்கள் மற்றும் உயர் வகுப்பினரின் பெரும்பாலான வாக்குகள் கெஜ்ரிவால் கட்சிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கும் ஆதரவில்லை

இது குறித்து, கெஜ்ரிவாலிடம் தி இந்து சார்பில் பேசுகையில், "ஆம் ஆத்மி கட்சியை ஒழிக்க 2 பெரிய கட்சிகளும் ரகசியமாக செயல்படுகின்றன. எங்கள் வேட்பாளர்களை ‘ஸ்டிங் ஆப்ரேஷன்’மூலம் சிக்க வைக்க முயன்றனர். அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இதுவே, எங்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

தொங்கு சட்டசபை எனும் கற்பனை கேள்விக்கு என்னால் பதில்தர முடியாது. ஆனால், எத்தகைய சூழலிலும் இரு ஊழல் கட்சிகளுக்கும் ஆதரவளிக்க மாட்டோம். நாடு முழவதும் ஊழலை ஒழிக்கவே கட்சியைத் தொடங்கி உள்ளோம்’ என்றார். எனவே, இந்தமுறை டெல்லி தேர்தலில் கடும் போட்டி நிலவும் எனக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x