நீங்கள் நினைத்தபடி பேசுவதற்கு யார் சுதந்திரம் அளித்தது? : ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் காட்டம்

நீங்கள் நினைத்தபடி பேசுவதற்கு யார் சுதந்திரம் அளித்தது? : ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் காட்டம்
Updated on
1 min read

யமுனை நதிப்படுகையில் வாழும் கலை அறக்கட்டளை உலகக் கலாச்சார திருவிழா நடத்துவதற்கு அனுமதி அளித்ததற்காக மத்திய அரசையும் தேசியத் தீர்ப்பாயத்தையும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குற்றம்சாட்டியதையடுத்து தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அவரைக் கடுமையாகச் சாடியுள்ளது.

தேசியப் பசுமைத் தீர்ப்பாய அமர்வின் தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் கூறும்போது, “உங்களுக்கு பொறுப்பு என்பதே இல்லை. நீங்கள் விரும்பியதையெல்லாம் பேசுவதற்கு யார் உங்களுக்கு சுதந்திரம் அளித்தது, உங்கள் கருத்து அதிர்ச்சியளிக்கிறது” என்றார் காட்டமாக.

யமுனை நதிப்படுகை வாழும்கலை உலகக் கலாச்சார மாநாட்டினால் முற்றிலும் சேதமடைந்துள்ளது அதனைச் சீர் செய்ய கோடிக்கணக்கில் செலவழியும் என்பதோடு யமுனை நதிப்படுகையை மீட்க குறைந்தது 10 ஆண்டுகளாகும் என்று விசாரணைக் குழு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

இந்நிலையில் மனுதாரர் மனோஜ் மிஸ்ராவுக்காக வாதாடிய வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் என்பவர், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சமீபத்தில் இந்த விவகாரத்தில் மத்திய அரசையும், தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தையும் சாடியிருந்ததை நீதிபதிகள் அமர்வின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அதாவது மத்திய அரசும், தேசியப் பசுமைத் தீர்ப்பாயமும் அனுமதியளித்ததை ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் விமர்சனம் செய்திருந்ததை நீதிபதிகள் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

அதாவது இந்த விழாவை நடத்த கடுமையான முட்டுக்கட்டைகளை ஏற்படுத்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தையே ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அனுமதி அளித்ததற்காக விமர்சனம் செய்ததுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

நிபுணர்கள் குழு அறிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாழும் கலை அறக்கட்டளை தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திடம் கோரியுள்ளது.

யமுனை நதிப்படுகை சேதங்கள் குறித்த நிபுணர்கள் குழு அறிக்கைக்கு எதிரான ஆட்சேபணைகளை 2 வாரங்களில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு மே 9-ம் தேதிக்கு வழக்கை இன்று ஒத்தி வைத்தனர்.

அதாவது சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டதென்றால் அதற்கு முழுப்பொறுப்பு அனுமதி அளித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் மத்திய அரசே என்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தனது சமூக வலைத்தளத்திலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் கூறியிருந்தார்.

யமுனை நதி ‘வலுவற்றதாகவும், சுத்தமாகவும்’ இருப்பதாகக் கருதியிருந்தால் முதலிலேயே நிறுத்தியிருக்கலாமே என்று கேட்கிறார் ரவிசங்கர்.

இதனையடுத்தே நீதிபதி இன்று காட்டமாக ரவிசங்கரை சாடியுள்ளார். யமுனைநதிப்படுகையைச் சீர்செய்ய இரண்டு விதமான வழிகள் உள்ளன என்றும் இதற்கு முறையே ரூ.28.71 கோடியும் ரூ.13.29 கோடியும் செலவழியும் என்று நிபுணர்கள் குழு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in