

பத்திரிகை விளம்பரம் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர் மீது ஹைதராபாத் போலீஸில் மனைவி புகார் அளித்துள்ளார்.
இது குறித்து ஹைதராபாத் மொகல்புரா போலீஸ் நிலைய ஆய்வாளர் தேவேந்தர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
கிங்க்ஸ் காலனி பகுதியை சேர்ந்த முஷ்டாக் உத்தீன் என்பவருக்கும், நாஸ்மீன் என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன்பின் இருவரும் துபாயில் பணியாற்ற சென்றனர். கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் ஹைதராபாத் வந்தனர். அப்போது தனது மனைவி நாஸ்மீனை அவரது தாயார் வீட்டில் விட்டுச் சென்ற முஷ்டாக், யாரிடமும் சொல்லாமல் திடீரென துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்த சூழலில் ஒரு உருது நாளிதழில் மனைவி நாஸ்மீனை விவாகரத்து செய்துவிட்டதாக கூறி முத்தலாக் விளம்பரம் கொடுத்துள்ளார். அந்த விளம்பரத்தை பார்க்கும்படியும், மனைவிக்கு மொபைலில் தகவல் அனுப்பினார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த நாஸ்மீன், கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.