பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வலுவான நாடாக உருவாகியுள்ளது: ராஜ்நாத் சிங்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வலுவான நாடாக உருவாகியுள்ளது: ராஜ்நாத் சிங்
Updated on
1 min read

பாதுகாப்பு படைகள் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தில் மேவார் மன்னர் ராணா பிரதாப் சிலையை ராஜ்நாத் நேற்று திறந்துவைத்துப் பேசும்போது, “பாதுகாப்பு படைகள் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். உரி தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்கும் பணியை இந்திய வீரர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றினர்.

தேவைப்பட்டால் தீவிரவாதிகளை அவர்கள் மண்ணிலேயே அழிப்போம் என்ற அழுத்தமான தகவலை இதன்மூலம் உலகுக்கு தெரிவித்தனர். நாட்டின் கவுரவத்துக்கு எந்தச் சூழ்நிலையிலும் களங்கம் ஏற்பட்டுவிட நாம் அனுமதிக்கக் கூடாது. எதிரிகளின் எல்லைக்குள் புகுந்து அவர்களின் நிலைகளை நாம் தகர்த்துள்ளோம். நமது வீரர்கள் மற்றும் ராணுவத்தால் நாம் பெருமிதம் கொள்கிறோம். அவர்கள் மீது நாம் பெரும் நம்பிக்கை வைத்துள்ளோம்” என்றார்.

காஷ்மீர் எல்லைப் பகுதியில் சமீப காலத்தில் இந்திய வீரர்கள் பலர் எதிரிகளின் தாக்குதலுக்கு பலியாகியுள்ள நிலையில் ராஜ்நாத் இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசும்போது, “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வலுவான நாடாக உருவாகியுள்ளது. வரலாற்றில் ராணா பிரதாப்புக்கு உரிய இடம் கிடைக்கவில்லை. அவரது பங்களிப்பை வரலாற்று அறிஞர்கள் மறு ஆய்வு செய்யவேண்டும். அக்பரை மகா அக்பர் என்று குறிப்பிடும் வரலாற்று அறிஞர்கள், ராணா பிரதாப்பை அவ்வாறு குறிப்பிடாதது எனக்கு வியப்பளிக்கிறது. அவரை ‘மகா’ என்ற அடைமொழியுடன் குறிப்பிடுவதற்கு தடையாக அவர்கள் என்ன குறைபாட்டை கண்டனர்?” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in