Last Updated : 03 Mar, 2017 11:32 AM

 

Published : 03 Mar 2017 11:32 AM
Last Updated : 03 Mar 2017 11:32 AM

வாரணாசியில் பிரதமர் மோடிக்கு சவால் விடும் ராகுல், அகிலேஷ்

பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியில் ராகுல் காந்தியும் அகிலேஷ் யாதவும் நாளை (மார்ச் 4) சாலை பிரச்சாரம் செய்கின்றனர். இதில், பிரதமர் மோடிக்கு சவால்விடும் வகையில் மக்களை திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

உத்திரப் பிரதேச சட்டப்பேரவைக்கு ஏழு கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. 6-ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இறுதிக்கட்டமாக வாரணாசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மார்ச் 8-ல் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணியில் இரு முக்கிய முகங்களான அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி ஆகிய இருவரும் வாரணாசியில் நாளை பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

மக்களவை தேர்தலில் வாரணாசியில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி, பிறகு இங்கு நன்றி கூறி ஊர்வலம் வந்தார். அப்போது வரலாறு காணாத வகையில் மக்கள் கூடினர். இந்த சாதனையை, ராகுல் – அகிலேஷின் நாளைய பிரச்சாரத்தில் முறியடிக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது.

வாரணாசி காவல்துறை குடியிருப்புகளில் இருந்து லங்கா பகுதி வரை சுமார் 15 கி.மீ தொலைவுக்கு பிரச்சாரம் நடைபெற உள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் சமாஜ்வாதி நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, "இந்தப் பிரச்சாரம் பிப்ரவரி 11, 27 ஆகிய தேதிகளில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டு ரத்துசெய்யப்பட்டது. இதற்கு அதிக கூட்டம் சேர்ப்பதில் ஏற்பட்ட சிக்கலே காரணம். மோடிக்கு வந்ததை விட அதிக மக்களை கூட்டி எங்கள் பலத்தை காட்டுவோம். உ.பி.யில் ஆட்சி அமைக்க முடிகிறதோ, இல்லையோ, வாரணாசியில் பாஜகவை தோல்வியுறச் செய்வதே இதன் நோக்கம். குறைந்தபட்சம் பிரதமரின் செல்வாக்கை குலைப்பது எங்கள் நோக்கமாகும்" என்று தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகளின் வியூகத்தை சமாளிக்க பாஜகவும் தயாராகி வருகிறது. வாரணாசியில் பிரதமர் மோடியும் நாளை சுமார் 9 மணி நேரம் தங்க உள்ளார். அப்போது, காலபைரவர், காசி விஸ்வநாதர் கோயில் பூஜைகளிலும் அவர் கலந்து கொள்கிறார்.

மத்திய அமைச்சர்கள் 6 பேர் வாரணாசியில் முகாமிட்டு, நேற்று முதல் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இம் மாவட்டத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளார். இவர் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் நேரடிப் பார்வையில் செயல்பட்டு வருகிறார். இவர்களுடன் ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் வாரணாசியில் வீதி, வீதியாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ராகுல், அகிலேஷ் ஆகிய இருவரும் வாரணாசி பிரச்சாரத்துக்கு முன்னதாக, அருகிலுள்ள மகராஜ்கன்ச் மற்றும் கோரக்பூரில் தனித்தனியே பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

வாரணாசியின் 7 தொகுதிகளில் ஒன்றில் காங்கிரஸ் எம்.எல்.ஏவான அஜய் ராய் போட்டியிடுகிறார். இவர் மக்களவை தேர்தலில் மோடிக்கு எதிராகப் போட்டியிட்டு மூன்றாமிடம் பெற்றவர் ஆவார். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இரண்டாமிடம் பெற்றார். அவரது ஆம் ஆத்மி கட்சி இம்முறை உ.பி. தேர்தலில் போட்டியிடவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x