

ஐபிஎல் சூதாட்ட வழக்கின் ஒரு பகுதியாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) சீரமைப்பதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழு கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பரிந்துரைகளை அளித்திருந்தது. இதை எதிர்த்து பிசிசிஐ மற்றும் பல்வேறு கிரிக்கெட் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. கடந்த திங்கள்கிழமையன்று இதன் மீதான தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், லோதா கமிட்டியின் பரிந்துரைகளை 6 மாதங்களுக்குள் அமல்படுத்துமாறு பிசிசிஐக்கு உத்தரவிட்டது.
லோதா கமிட்டியின் பரிந்துரைகளில் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கான வயது வரம்பு 70-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பிசிசிஐயில் பொறுப்பு வகிக்க கூடாது, 9 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் பதவி வகிக்கக்கூடாது என்பன உட்பட பல்வேறு விஷயங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவரான சரத் பவார் 70 வயதை கடந்தவர் என்பதாலும் 9 ஆண்டுகளுக்கு மேல் மும்பை கிரிக்கெட் சங்கத்தில் பதவி வகிப்பவர் என்பதாலும் அவரால் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் கிரிக்கெட் வாரியத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த ஒப்புதல் அளித்தது. இதனால் மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகுவது உறுதியாகியுள்ளது.
இகூட்டத்துக்கு பிறகு சரத் பவார் நிருபர்களை சந்தித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்துவதால், மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த 6 மாதகால அவகாசம் உள்ளது. அதற்குள் புதிய சட்டதிட்டங்களை வகுப்போம்” என்றார்.