

ஆந்திராவில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் கனமழை பெய்தது. இதனால் கடலோர மாவட்டங்களில் பேருந்து, ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து சென்றதிலும், வீடுகள் இடிந்து விழுந்ததிலும் நேற்று வரை மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நாசமடைந்தன.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் மழை நீடித்தது. இதனால் பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா, காகுளம், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குறிப்பாக கிருஷ்ணா, பிரகாசம், குண்டூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் பயிர்கள் நாசமடைந் தன. சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பயிர்கள் நாசமடைந்ததாக அதிகாரிகள் நேற்று அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட 10 பேரில் 7 பேர் சடலமாக மீட்க பட்டனர். மேலும் 3 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனிடையே இடி தாக்கியும், வீடுகள் சரிந்து விழுந்தும் மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.
வெள்ளம் காரணமாக செகந் திராபாத்-குண்டூர் இடையே ரயில் போக்குவரத்து 2-வது நாளாக நேற்றும் ரத்து செய்யப்பட்டது. இந்த தடத்தில் சுமார் 15 கிமீ தொலைவுக்கு ரயில் பாதை வெள்ளத்தில் அடித்துச் சென்றதால் அங்கு போர்க்கால அடிப்படையில் மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதல்வர் சின்ன ராஜப்பா, அமைச்சர் பி. புல்லாராவ் மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
ஹைதராபாத் முடங்கியது
ஹைதராபாத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் விடிய விடிய கனமழை கொட்டி வருகிறது. இதனால் முழு நகரமும் வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கிறது. தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடு முறை அளிக்கப்பட்டது. சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டி ருப்பதால் பால், காய்கறி உள்ளிட்ட சரக்கு பரிவர்த்தனைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் ஒரு லிட்டர் பால் ரூ.80-க்கும், குடிநீர் கேன் ரூ.60-க்கும் விற்கப்படுகிறது.
மீட்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ள துணை ராணுவத்தினர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மக்களை மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திராவில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.