

மணிப்பூர், பஞ்சாப், அசாம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் நேற்று வெளி யான அறிவிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
மணிப்பூர் ஆளுநராக நஜ்மா ஹெப்துல்லா, பஞ்சாப் ஆளுநராக வி.பி.சிங் பத்னோர் (68), அசாம் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் (76), அந்தமான் நிகோபார் தீவுகள் துணை நிலை ஆளுநராக ஜகதீஷ் முகி (73) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
76 வயதான நஜ்மா ஹெப்துல்லா, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்து கடந்த மாதம் விலகினார். 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அமைச்சர் பதவி இல்லை என்ற எழுதப்படாத விதியை பிரதமர் மோடி பின்பற்றுவதாக கூறப்படும் வேளையில் நஜ்மா பதவி விலகினார்.
பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட் டுள்ள வி.பி.சிங் பத்னோர், ராஜஸ்தானை சேர்ந்தவர். இவர் முன்னாள் மாநிலங் களவை உறுப்பினர் ஆவார்.
அசாம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித், முன்னாள் மக்களவை உறுப்பினர். இவர் நாக்பூரில் இருந்து மக்களவைக்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் நாக்பூரில் இருந்து வெளியாகும் ஹிடாவதா என்ற நாளேட்டின் நிர்வாக ஆசிரியர் ஆவார்.
அந்தமான் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜகதீஷ் முகி, டெல்லி முன்னாள் எம்எல்ஏ ஆவார். புதிய ஆளுநர்கள் அனைவரும் பாஜகவை சேர்ந்தவர்கள் ஆவர்.
மணிப்பூர் ஆளுநர் பொறுப்பை மேகாலயா ஆளுநர் வி.சண்முக நாதன் கூடுதலாக கவனித்து வந்தார். இதுபோல் பஞ்சாப் ஆளுநர் பொறுப்பை ஹரியாணா ஆளுநர் கேப்டன் சிங் சோலங்கியும் அசாம் ஆளுநர் பொறுப்பை நாகாலாந்து ஆளுநர் பத்மநாப பாலகிருஷ்ண ஆச்சார்யாவும் கூடுதலாக கவனித்து வந்தனர். அந்தமான் துணை நிலை ஆளுநர் ஏ.கே.சிங்குக்கு பதிலாக புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.