

அணு மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, இனிமேல் 1,200 மெகாவாட் உற்பத்தித் திறனுக்கு மேற்பட்ட வெளிநாட்டு அணு உலைகளை நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட வெளிநாட்டு அணு உலைகளை ஏற்கெனவே நிறுவி உள்ளோம். இனிமேல் 1,200 மெகாவாட் உற்பத்தித் திறனுக்கு மேற்பட்ட அணு உலைகள் நிறுவப்படும். இதே திறனுடன் நம்மிடமுள்ள அணு உலைகளில் இது மிகவும் நவீன தொழில்நுட்பத்தை அடிப் படையாகக் கொண்டிருக்கும். இதனை நிறுவினால் கூடுதலாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்” என்றார்.
தமிழகத்தின் கூடங்குளம் பகுதியில் ரஷ்யாவின் கூட்டு முயற்சியுடன் அணு மின் நிலையம் நிறுவப்பட்டு வருகிறது. இதன் முதல் பிரிவு உற்பத்தியைத் தொடங்கி விட்டது. 2-ம் பிரிவு தயாராக உள்ளது. இதன் உற்பத்தி திறன் தலா 1,000 மெகாவாட் ஆகும்.
இந்நிலையில் ரஷ்யாவின் கூட்டு முயற்சியுடன் 2-வது அணு மின் நிலையம் அமைப்பதற்காக ஆந்திர மாநிலம் கவாலியில் இடம் ஒதுக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. இதில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அணு உலை நிறுவப்படும் எனத் தெரிகிறது.
மேலும் அமெரிக்க நிறுவனம் சார்பில் ஆந்திராவின் கொவ்வடா வில் அமைய உள்ள 6 அணு உலைகளின் உற்பத்தித் திறனை தலா 1,000-லிருந்து 1,208 மெகா வாட்டாக அதிகரிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதுபோல மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாபூர் அணு மின் நிலையத்தில் தலா 1,650 மெகா வாட் திறன் கொண்ட 6 அணு உலை கள் அமைக்கப்படும்.