

டெல்லியில் உள்ள கேரளா இல்ல உணவு விடுதியில் மாட்டிறைச்சி விற்கப்படுவதாக பொய்யான புகார் அளித்ததன் காரணமாக இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா கைது செய்யப்பட்டார்.
விஷ்ணு குப்தாவை விசாரித்து வருவதாக டெல்லி டிசிபி ஜதின் நார்வல் தெரிவித்தார். ஆனால் அதற்கு மேல் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கேரள அரசின் விருந்தினர் இல்லமான கேரளா பவன் அமைந்துள்ளது. இங்குள்ள உணவகத்தில் வெளி ஆட்களும் சாப்பிட அனுமதிக்கப்படுகின்றனர். இந்த உணவகத்தில் பசுவின் இறைச்சி பரிமாறப்படுவதாக டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு திங்கள் மாலை புகார் வந்தது. இந்துசேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் இந்தப் புகாரை அளித்தார்.
டெல்லியில் பசு இறைச்சி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 20 போலீஸார் உடனே கேரளா பவன் உணவகம் சென்று அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இதுவே பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. இதற்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
தற்போது டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸி கூறும்போது, “கைது செய்யப்பட்ட நபர் ஏற்கெனவே இத்தகைய செயல்களைப் புரிந்துள்ளதால் போலீஸாரின் கண்காணிப்பில் இருந்தவர்” என்றார். இதனையடுத்து டெல்லி கேரள இல்லத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.