

அமெரிக்காவுடனான வர்த்தக-ராணுவ கூட்டுறவை விட அங்கு வசிக்கும் இந்தியர்களின் நலனே முக்கியம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
திங்களன்று மாநிலங்களவையில் இடதுசாரிகள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சுஷ்மா ஸ்வராஜ், “அமெரிக்காவுடனான வர்த்தக-ராணுவ கூட்டுறவு என்பது அங்கு வாழும் இந்தியர்கள் நலனை ஒப்பிடும்போது இரண்டாம்பட்சமே. இந்தியர்கள், இந்திய வம்சாவழியினர் ஆகியோரது பாதுகாப்பே முக்கியம். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கே நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.
சமீபகாலங்களில் அமெரிக்காவில் இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் நிறவெறி கோணங்களையும் நாம் ஒதுக்கி விட முடியாது. இருந்தாலும் இத்தாக்குதல்கள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது, விசாரணையின் முடிவில் தாக்குதலுக்கான காரணங்கள் தெரியவரும்.
ஸ்ரீநிவாஸ் தாக்கப்பட்டு உயிரிழந்தது, மற்றும் சிலர் தாக்குதல் நிறவெறி சாத்தியங்களை நீக்கி விடவில்லை. நிறவெறி கோணத்தில் தாக்குதல்களை அணுக வேண்டும் என்று அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளோம். ஆனால் இந்தத் தாக்குதல் பெரும்பான்மை அமெரிக்கர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக நாம் தப்புக் கணக்கு போடக்கூடாது” என்றா இவரது கருத்து உறுப்பினர்கள் பாராட்டுதலுடன் கூடிய ஆரவாரம் எழுப்பினர்.
மேலும் அவர் கூறும்போது, “இந்தியர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து வழக்கமாவதை அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்கா வாக்குறுதி அளித்துள்ளது” என்றார்.
சிபிஐ கட்சியின் டி.ராஜா, சிபிஎம் கட்சியின் சீதாராம் யெச்சூரி ஆகியோரும் இது குறித்து தெளிவு தேவை என்ற ரீதியில் கேள்வி எழுப்ப சுஷ்மா ஸ்வராஜ் அதற்குப் பதில் அளித்தார்.