

மலை மனிதர் எனப் புகழப்படும் தஸ்ரத் மஞ்சியின் சிலைக்கு ஹிந்தி நடிகர் ஆமிர் கான் மலரஞ்சலி செலுத்தினார். அவரின் குடும்பத்தினரைச் சந்தித்த அவர், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தார்.
பிஹார் மாநிலம் முஹ்ரா ஒன்றியம் கெஹ்லவுர் கிராமத்தில் உள்ள தஸ்ரத் மஞ்சியின் சிலைக்கு ஆமிர் கான் செவ்வாய்க்கிழமை மலரஞ்சலி செலுத்தினார்.
ஆமிர்கானின் புகழ்பெற்ற டிவி தொடரானா ‘சத்யமேவ ஜெயதே‘ 2-ம் பாகத்தில் தஸ்ரத் ரஞ்சியின் வாழ்க்கை வரலாறு சொல்லப்படவுள்ளது. இதற்கான படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இத்தொடர் வரும் மார்ச் மாதம் ஒளிபரப்பாகிறது.
இதனொரு பகுதியாகவே, ஆமிர் கான் தஸ்ரத் மஞ்சியின் கிராமத்துக்குச் சென்று அவரின் குடும்பத்தினரைச் சந்தித்து, தேவையான உதவிகளைச் செய்வதாக வாக்களித்துள்ளார்.
சத்தியமேவ ஜெயதே 2-ம் பாகத்தை தஸ்ரத்துக்கு அர்ப்பணிப்பதாக ஆமிர்கான் தெரிவித்துள்ளார். “தஸ்ரத்தின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு நான் தலைவணங்குகிறேன்” என ஆமிர் தெரிவித்துள்ளார்.
யார் இந்த மலை மனிதர்?
பிஹார் மாநிலம் கயை பகுதி முஹ்ரா ஒன்றியம் கெஹ்லவுர் கிராமத்தில் 1934-ம் ஆண்டு பிறந்தவர் தஸ்ரத் மஞ்சி. நிலமற்ற ஏழை விவசாயியான இவரின் மனைவி உடல் நலம் குன்றி, மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழந்தார்.
கெஹ்லவுர் கிராமத்துக்கு சரியான அணுகுபாதை இல்லை. எனவேதான் அவரின் மனைவிக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்கவில்லை.
தன் மனைவிக்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் நேரக்கூடாது எனக் கருதிய தஸ்ரத், அங்கிருந்த மலையை வெட்டி பாதை அமைக்கும் பணியைத் தொடங்கினார்.
தனி மனிதராக எவரொருவரின் துணை இன்றி, இரவு பகலாக பாதை அமைக்கும் பணியைச் செய்தார். கடினமான மலைப்பாறையைக் குடைந்து, 360 அடி நீளம், 30 அடி அகலம், 25 அடி ஆழம் மலையை வெட்டி பாதையை அமைத்தார். இதற்காக அவர் 1960-ம் ஆண்டு முதல் 1982-ம் ஆண்டு வரை 22 ஆண்டு கால கடும் உழைப்பைச் செலவிட்டார்.
இறுதியாக அந்தப் பாதை அமைந்தே விட்டது. இந்தப்பாதையால், அத்ரி-வாஸிர்கஞ்ச் ஒன்றியத்துக்கு இடையேயான தொலைவு 55 கி.மீ. என்பதிலிருந்து 15 கி.மீ. ஆகச் சுருங்கிப் போனது.
ஏழையாக இருந்தாலும் தனிமனிதராகப் போராடிய மலையைப் பணிய வைத்த தஸ்ரத், மலை மனிதர் எனப் புகழப்பட்டார். அவர் 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி காலமானார். அவரின் பெருமுயற்சியைப் பாராட்டி பிஹார் அரசு, அவருக்கு அரசுமரியாதையுடன் இறுதிச் சடங்கைச் செய்தது.
தஸ்ரத் மஞ்சியின் வாழ்க்கை வரலாறு ‘மஞ்சி‘ என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.