Published : 16 Mar 2014 12:00 AM
Last Updated : 16 Mar 2014 12:00 AM

தேர்தல் கருத்துக் கணிப்புகள் நல்ல கேலிக் கூத்து: ராகுல் கருத்து

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 100 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தரும் தீர்ப்பு சரியான கேலிக்கூத்து என்று வர்ணித்தார் அதன் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

‘கூகுள் ஹேங்அவுட்’ மூலம் முதல்முறையாக கட்சித்தொண்டர்களுடன் சனிக்கிழமை நடத்திய ஆலோசனையில் அவர் கூறியதாவது:

கருத்துக்கணிப்பு மூலம் வழங்கும் தீர்ப்பு சட்டம் அல்ல. பாஜகவும் நரேந்திர மோடியும் ஆட்சியில் அமர முடியாது. மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்களை வேட்பாளர்களாக அறிவிப்பதில் பாஜகவுக்குள் பூசல் நிலவுவதாக செய்திகள் வெளி வருகின்றன. இதுதான் பிரதான எதிர்க்கட்சியின் நிலைமை.

வெறும் 100 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இது நல்ல கேலிக்கூத்து ஆகும். 200க்கும் அதிகமான தொகுதிகளை நாம் கைப்பற்றப் போகிறோம் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

எதிர்க்கட்சிகளின் நோக்கமே காங்கிரஸ் தொண்டர்களின் மனதை துவளச் செய்வதும் தோல்வியுறப் போகிறோம் என்ற சந்தேகத்தை உருவாக்குவதுமேயாகும். நமது உற்சாகம், மன உறுதியை குலைப்பதே எதிர்க்கட்சி பிரசாரத்தின் முழு நோக்கமும். இதனால் துவண்டு போகாமல் உற்சாகத்துடன் தேர்தலை எதிர்கொண்டால் எதிர்க் கட்சிகளை சுருளச் செய்யலாம்.

2004-ல் தேர்தலில் வெளியான கருத்துக் கணிப்புகள் ஒவ்வொன்றும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும் எனவும் இருக்கும் இடம் தெரியாமல் போகும் என தெரிவித்தன. அந்த கணிப்புகளை பொய்யாக்கி காங்கிரஸ் வெற்றி பெற்றது.

2009-ம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் காலியாகும் என கருத்துக் கணிப்புகள் கூறின. மாறாக வெற்றி எண்ணிக்கை இரு மடங்காகியது.

இப்போது 3ம் முறையாக இந்த தேர்தலை எதிர்கொள்கிறோம். காங்கிரஸ் கட்சி காலி என எப்போதும் போல இப்போதும் சொல்கிறார்கள். கருத்துக் கணிப்புகள் சட்டம் அல்ல என்பதை நமது மனதில் கொள்வோம். கடினமான இந்த தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெற போராடுவோம்.

மாற்றம் ஏற்படுத்துவதில் நம்பிக்கை கொண்டது காங்கிரஸ் கட்சி. பாஜகவோ பழமைவாதத்தில் ஊறிய கட்சி. எதிர்க்கட்சி விரிக்கும் வலையில் கட்சித் தொண்டர்கள் விழுந்து விடக்கூடாது. பாஜகவில் வேட்பாளரை ஒரே ஒரு நபர் தீர்மானிக்கிறார். அவர்கள் ஒரு திசையில் சென்றால் நாம் வேறு பாதையை நோக்கி செல்கிறோம் என்றார் ராகுல் காந்தி.

மோடியும் அவரது பாஜகவும் ஆட்சிக்கு வந்தால் வகுப்புவாத சக்திகளை காங்கிரஸ் எப்படி எதிர்த்துப் போராடும் என ஒரு கேள்வி எழுந்தபோது அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, அடுத்த தேர்தலில் வெற்றி பெறப்போவது காங்கிரஸ்தான். எனவே பாஜக ஆட்சிக்கு வரப்போவது பற்றி கேள்வியே வேண்டாம் என்றார்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த கூகுள் ஹேங்அவுட் மூலமான நேரடிகருத்துப் பரிமாற்றத்தில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், ஒடிஸா, தமிழ்நாடு, கேரள மாநிலங்களைச் சேர்ந்த கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x