

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள அனைத்து தரிசனத்துக்கான பதிவுகளையும் படிப்படியாக ஆன்லைன் மயமாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஏழுமலையானை பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் தங்கும் அறைகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இதனால் சமீபத்தில் ரூ. 300 சிறப்பு கட்டண தரிசனத்தை ஆன்லைன் மயமாக்கியது.
இதன் மூலம் 11 ஆயிரம் டிக்கெட்டுகளை ஆன்லைனிலும், இ-தரிசன மையங்களிலும் பக்தர்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்தது. இதற்கு பக்தர்களிடையே வரவேற்பு இருப்பதால் இனி சர்வ தரிசனம், நடையாக மலையேறி வரும் பக்தர்களுக்கும், குழந்தை களை கொண்டு வரும் பெற்றோருக்கும் மற்றும் ரூ. 50 சுதர்சன கட்டண தரிசனம் ஆகியவற்றுக்கான பதிவுகளை ஆன்லைன் மயமாக்க செய்ய முடிவெடுத்துள்ளது.
இதனால் ஏழுமலையானை 3 மணி நேரத்தில் தரிசனம் செய்யலாம். இத்திட்டத்தை படிப்படியாக அமல் படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து ஆர்ஜித சேவைகள் செய்யும் பக்தர்கள், வி.ஐ.பி பிரேக் தரிசனம், ரூ. 50 சுதர்சனம், ரூ. 300 ஆன்லைன் சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே கலாச்சார உடை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
வேத பண்டிதர்கள், அர்ச்ச கர்கள் கூறிய ஆலோசனைப் படி, திருமலையில் கலாச்சார உடையை கட்டாயப்படுத்துவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். விரைவில் திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும் கலாச்சார உடையில் வருவது கட்டாய மயமாக்குவது குறித்து விரைவில் அறிவிக்க உள்ளனர்.