

திருவிதாங்கூர் ராஜவம்சத்தைச் சேர்ந்த உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா (91) உடல்நலக்குறைவால் காலமானார்.
உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவுக்கு இரைப்பை-குடல் ரத்தக் கசிவு ஏற்பட்டது. தொடர்ந்து மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 6ம் தேதி திருவனந்தபுரம் உத்திராடம் திருநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு மாரடைப்புக் காரணமாக அவர் உயிரிழந்தார்.
மன்னரின் உடல் பத்மநாபபுரம் அரண்மனைக்குச் சொந்தமான இடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
திருவனந்தபுரம் கபடியார் அரண்மனையில் மார்த்தாண்ட வர்மாவுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இங்குதான் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
தென் கேரளாவை ஆண்ட திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையை சேர்ந்தவர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா (91). இவர் கிளிமானூர் அரண்மனையை சேர்ந்த ரவிவர்மாவுக்கும் சேர வம்சத்தை சேர்ந்த சேது பார்வதிபாய்க்கும் 1922ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி உத்திராடம் நாளில் பிறந்தார்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னரான (மன்னராட்சி முறை நீக்கப்பட்டதால் நாடற்ற மன்னர்) ஸ்ரீசித்திரை திருநாள் பாலராமவர்மா கடந்த 1991 ஆம் ஆண்டு இறந்தார்.
அவரையடுத்து அவரின் தம்பி உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா திருவாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராகப் பொறுப்பேற்றார்.
உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவின் மனைவி ராதா தேவி கடந்த 2005ம் ஆண்டு காலமானார். இவருக்கு பத்மநாப வர்மா என்ற மகனும், பார்வதி வர்மா என்ற மகளும் உள்ளனர்.
எளிமையானவர்
மிக எளிமையாகக் காணப்பட்ட உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, பொது நிகழ்ச்சிகளில் சகஜமாகப் பங்கேற்பார். அரசியல் நிகழ்வுகளில் இருந்து விலகியே இருந்தார்.
சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியா, சுதந்திர இந்தியா இரண்டுக்கும் கால சாட்சியாக இருந்த மார்த்தாண்ட வர்மா, சுதந்திர இந்தியாவில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்ட பிறகு, பல்வேறு அறக்கட்டளைகளுக்குத் தலைவராக இருந்தார்.
பத்மநாபபுரம் கோவில்
பத்மநாபபுரம் கோவில் சுரங்க அறைகளில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கண்டறியப்பட்ட போது, ‘அவை கடவுளுக்குச் சொந்தமானவை. அதில் தாம் உரிமை கோரப்போவதில்லை’ என மார்த்தாண்ட வர்மா தெரிவித்திருந்தார்.
அண்மையில் கேரளம் வந்திருந்த பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மார்த்தாண்ட வர்மாவைச் சந்தித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
நேபாள மன்னர் மகேந்திரா, பீரேந்திரா, பெர்சிய மன்னர் ஷா, சோவியத் தலைவர் நிகிதா குருசேவ் உள்ளிட்டோர் இவரின் நண்பர்களாவர்.
அரசு விடுமுறை
மார்த்தாண்டவர்மாவின் மரணத்தையொட்டி, திருவாங்கூர் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு மாநில அரசு விடுமுறை அளித்தது.