

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லான்ஸ் ஹாவில்தார் ரஞ்சித் கவாதே சமூக ஊடகத்தில் ஒரு சிறு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் தான் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்ய நேரிட்டால் என் உடலை ஊழல் அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ தொடக்கூடாது என்று இந்திய ராணுவ வீரர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சமீபகாலங்களாக ராணுவ வீரர்கள் தங்களது வேதனைகளை பகிர்ந்து கொள்ள சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அவர் தனது இந்த விருப்பம் கடைசி உயிலாகவே கருதப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
“கடந்த ஆண்டில் ராணுவ வீரர்கள் மோசமாக நடத்தப்பட்டது குறித்து புகார்கள் வெளியாகின. இது எனக்கும், என்னைப் போன்ற பிறருக்கும் வேதனையளிக்கிறது. எனவே, நான் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்ய நேரிட்டால், ஊழல் அரசியல்வாதிகளோ, சுயநலமிகளான அதிகாரிகளோ என் உடலை தொடக்கூடாது. நான் மட்டுமல்ல, இன்னும் சில சாதாரண ராணுவ வீரர்களின் விருப்பமும் இதுவே” என்கிறார் ஹாவில்தார் கவாதே.
இவர் முன்னதாக தனது சொந்த கிராமமான மகாலுங்கே கிராமத்தில் ‘நான் யார்?’ என்ற தலைப்பில் கவிதை ஒன்றை பலகையில் எழுதி வைத்தார், அதில் ராணுவ வீரர்களின் தன்னலமற்ற சேவையையும் அர்ப்பணிப்புணர்வையும் பிரதானப்படுத்தியிருந்தார்.
தற்போது ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வரும் ஹாவில்தார் கவாதே, தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “நான் ஒரு சாதாரண ராணுவ வீரன், ராணுவ வீரர்களை கவனமாக பார்த்துக் கொள்வதில் அவர்கள் மீது அக்கறை செலுத்துவதில் இந்திய ராணுவம் போன்ற வேறு அமைப்பை நான் பார்த்தது கிடையாது என்பதை நான் ஆவணபூர்வமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.
என்னுடைய கவிதைக்கும், வீடியோ பதிவுக்கும் காரணம், சமீபகாலங்களில் ராணுவ வீர்ர்கள் மோசமாக நடத்தப்பட்டது குறித்து எழுந்த புகார்களே. என்னுடைய வேதனை அனைத்து அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு எதிரானதல்ல, குறிப்பாக ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு எதிரானதே” என்றார்.