

ஹரியாணாவின் குருகிராமில் ஏராளமான இறைச்சி கடைகள் உரிய உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின்போது 9 நாட்களும், பிரதி செவ்வாய்க் கிழமை தோறும் இறைச்சி கடைகளை மூடும்படி 200-க்கும் மேற்பட்ட சிவசேனா தொண்டர்கள் திரண்டு வந்து உரிமையாளர்களை மிரட்டியுள்ளனர்.
மேலும் கேஎப்சி போன்ற அசைவ உணவகங்களையும் மூடும்படி அவர்கள் மிரட்டல் விடுத் துள்ளனர். இதனால் பீதியடைந்த சில உரிமையாளர்கள் தங்களது கடைகளை மூடிவிட்டு சென்றுள்ள தாக கூறப்படுகிறது. இதுகுறித்து குருகிராம் சிவசேனா தலைவர் கவுதம் சைனி கூறும்போது, ‘‘கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாலம் விஹாரில் சேனா தொண்டர்கள் ஒன்று திரண்டு அங்கு இயங்கி வந்த இறைச்சி கடைகளை மூடும்படி வலியுறுத்தினர். மேலும் அசைவ உணவகங்களையும் மூடும்படி கேட்டுக் கொண்டோம்’’ என்றார்.
அதே சமயம் மிரட்டல் விடுத்து கடைகளை மூடச் சொல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என குருகிராம் போலீஸ் இணை ஆணையர் மணிஷ் சேகல் எச்சரித்துள்ளார்.