

பிரதமர் நரேந்தர மோடி தனது அரசின் சாதனைகளை நாட்டின் மூலைமுடுக்குகளிலும் பறைசாற்ற புதிய முயற்சி செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு சார்பில் முதன் முறையாக பிராந்திய நாளிதழ் ஆசிரியர்கள் மாநாடு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நாளை தொடங்குகிறது.
மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்துடன் இணைந்து அதன் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் மையம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சமூக நாளிதழ்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம். பெரும்பாலும் சம்பிரதாயத்துக்காகவே இந்த மாநாடு நடைபெறும். ஆனால் இந்த முறை தங்களது சாதனைகளை பறை சாற்றுவதற்காக இந்த மாநாட்டை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜெய்ப்பூரில் நாளை தொடங்க உள்ள இந்த ஆண்டுக்கான மாநாட்டை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி தொடங்கி வைக்கிறார். இதில் பத்துக்கும் மேற்பட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, முதன்முறையாக ‘பிராந்திய நாளிதழ் ஆசிரியர்கள் மாநாடு’ நடைபெறுகிறது. இதில், தமிழகம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நாடு முழுவதிலும் இருந்து சுமார் 100 நாளிதழ்களின் ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆசிரியர்களை மத்திய அமைச்சர்கள் தனியாக சந்தித்து, பிரதமர் மோடி அரசின் சாதனைகள் பற்றி எடுத்துக் கூற உள்ளனர்.
இதுகுறித்து மத்திய தகவல் தொடர்பு அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தேசிய நாளிதழ்களுக்கு நிகராக, மத்திய அரசின் சாதனைகள் தொடர்பான செய்திகளை பல்வேறு மொழி மற்றும் பிராந்திய நாளிதழ்கள் வெளியிடுவதில்லை. எனவே இந்த மாநாட்டுக்கு வரும் பிராந்திய நாளிதழ் ஆசிரியர்களிடம் இதுகுறித்து பேசுவோம். அத்துடன் மத்திய அரசின் செயல்பாடுகள் பற்றிய மதிப்பீட்டையும் அவர்களிடம் இருந்து பெற முயற்சி செய்யப்படும். குறிப்பாக, மத்திய அரசுக்கும் பிராந்திய மொழி ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.
இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முதன்முறையாக பிரதமர் அலுவலகம் மேற்பார்வையிட்டு வருகிறது. இதற் கான ஏற்பாடுகளுக்கு ராஜஸ்தான் மாநில அரசும் ஒத்துழைப்பு அளித்து வருகிறது. முதலில் இந்த மாநாட்டை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அங்கு ஏற்பட்ட பெருமழை, வெள்ளம் காரணமாக ராஜஸ்தானுக்கு மாற்றப்பட்டது.
இந்த மாநாட்டில் மத்திய அரசின் சமூக, சுகாதார, பெண்கள், கிராம வளர்ச்சி மற்றும் சிறுபான்மை யினருக்கான நலத் திட்டங்களை முன்னிறுத்த முடிவு செய்யப்பட் டுள்ளது. பிரதமர் மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ மற்றும் சுயதொழில் உதவி திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
கப்பல் மற்றும் சாலை போக்கு வரத்து அமைச்சர் நிதின் கட்கரி, சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா, சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, கிராம வளர்ச்சித் துறை அமைச்சர் வீரேந்திர சிங் சவுத்ரி, வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு உட்பட பத்துக்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.