

‘உலகம் முழுவதும் செய்துவைக்கப்படும் பால்ய விவாகத்தில் மூன்றில் ஒரு பகுதி, இந்தியாவில் நடைபெறுகிறது. இந்திய பெண்களில் பாதி பேர், 18 வயது எட்டுவதற்கு முன்பாகவே திருமணம் செய்துவைக்கப்படுகின்றனர்’ என்று ஐநாவின் மக்கள்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.
ஜூலை 11-ம் தேதி சர்வதேச மக்கள்தொகை தினம். இதையொட்டி டெல்லியில் உள்ள ஐநாவின் மக்கள்தொகை நிதியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய மக்கள்தொகையில், 10 முதல் 19 வயதுடைய இளம் பருவத்தினர், 21 சதவீதம் பேர் உள்ளனர். இந்த பருவத்தினரில் 48 சதவீதம் (11.5 கோடி) பேர் பெண்கள்.
வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பல்வேறு அறிகுறிகள் தென்பட்டாலும் சில பிரச்னைகள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, இளம்பருவத்தில் பெண்கள் தங்களின் முழு திறனை வெளிப்படுத்தி உயர்நிலையை அடைய அனுமதிக்கப்படுவதில்லை.
15 முதல் 19 வயதுடைய பெண்களில் 14 சதவீதம் பேர் இன்னமும் கல்வியறிவு பெறாதவர்களாக உள்ளனர். மேலும், 73 சதவீதம் பேர் 10 ஆண்டு கல்விப் படிப்புக்கு மேல் செல்லாதவர்களாக உள்ளனர்.
அதேபோல் இந்திய பெண்களில் பாதிபேர் 18 வயதை எட்டும் முன்பே திருமணம் செய்தவர்களாக இருக்கின்றனர். அதாவது, உலகம் முழுவதும் நடக்கும் பால்ய விவாகத்தில், மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் நடக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.