Published : 14 Dec 2013 09:38 AM
Last Updated : 14 Dec 2013 09:38 AM

ஆந்திர சட்டமன்றத்தில் அமளி: தெலங்கானா மசோதா தாக்கல் ஒத்திவைப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “ஆந்திரப்பிரதேச மறுசீரமைப்பு மசோதா 2013” அம்மாநில சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்படவில்லை. தெலங்கானா மற்றும் சீமாந்திரா எம்எல்ஏக்கள் பகுதி வாரியாக பிரிந்து நின்று அவை நடவடிக்கைகளை முடக்கியதால், அவை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால் அமைச்சர்கள் உள்ளிட்ட தெலங்கானா உறுப்பினர்கள் இருண்ட முகத்துடனும், கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா உறுப்பி னர்கள் தங்கள் திட்டம் நிறைவேறிய மகிழ்ச்சியிலும் வெளியேறினர்.

ஆந்திர சட்டமன்றம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய உடனேயே அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தெலங்கானா மற்றும் சீமாந்திரா பகுதி எம்எல்ஏக்கள் கையில் பதாகைகளுடன் பேரவை தலைவரின் இருக்கையை முற்றுகை யிட்டு, மாநிலப் பிரிவினைக்கு ஆதரவாகவும், எதிராகவும் முழக்கமிட்டனர். இதனால் பேரவைத் தலைவர் அவையை 2 முறை, அரை மணி நேரத்துக்கு ஒத்திவைத்தார். இதனால் பலன் ஏற்படாததை தொடர்ந்து மதியம் 2 மணிக்கு ஒத்தி வைத்தார். பின்னர் மீண்டும் அதே நிலை நீடித்ததால், திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

இந்த மசோதா மாநில அரசுக்கு குடியரசுத் தலைவரால் நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைக்கப்பட்டது. அரசியலமைப்பு சட்ட பிரிவு 3-ன்படி, மாநிலப் பிரிவினை தொடர்பாக சட்ட மன்றத்தின் கருத்துகளை குடியரசுத் தலைவர் கேட்டிருந்தார். இதனை திருப்பி அனுப்புவதற்கு அடுத்த மாதம் ஜனவரி 23ம் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தார். இந்த மசோதா வெள்ளிக்கிழமை அவையில் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த நடைமுறை முடிவடைய அனுமதிக்க கூடாது என சீமாந்திரா பகுதி உறுப்பினர்களின் முடிவால் அவையில் அமளி ஏற்பட்டது.

அவையில் மசோதா தாக்கல் செய்யப்படாததை தொடர்ந்து தெலங்கானா பகுதி உறுப்பினர்கள் கொதிப்புடன் காணப்பட்டனர். இதற்கு நேர்மாறாக, சீமாந்திரா பகுதி உறுப்பினர்கள் தங்கள் திட்டம் நிறைவேறிய மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்நிலையில் முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என தெலங்கானா பகுதியைச் சேர்ந்த துணை முதல்வர் தாமோதர ராஜநரசிம்மா மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

“கிரண்குமார் தெலங்கானாவுக்கு எதிரானவர். இதனால் அவர் மசோதாவுக்கு ஒவ்வொரு நிலையிலும் தடை ஏற்படுத்துகிறார். அவர் மீது நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம்” என்று சட்டமன்ற வளாகத்தில் தெலங்கானா பகுதி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களிடம் அவர் கூறியதாக தெரிகிறது.

இதற்கு மாறாக மாநில தலைமைச் செயலாளர் பிரசன்ன குமார் மொகந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர, தெலங்கானா ராஷ்டிர சமிதி, தெலுங்கு தேசம், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்களை கொண்ட தெலங்கானா மன்றம், பேரவைத் தலைவர் நடேன்டலா மனோகரிடம் நோட்டீஸ் அளித்தது. வரைவு மசோதாவின் நகலை அவையில் தாக்கல் செய்வதற்கு தலைமைச் செயலாளர் உரிய நேரத்தில் அனுப்பவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதனிடையே சீமாந்திரா பகுதி உறுப்பினர்களுடன் முதல்வர் கிரண்குமார் ரெட்டி தனியறையில் பேச்சு நடத்தினார். அப்போது அவையில் மசோதா தாக்கல் செய்யப்படும்போது, கையாளவேண்டிய உத்திகள் குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. “மசோதாவை அதன் ஒவ்வொரு பிரிவு வாரியாக நாம் விவாதித்து தனித்தனியே நிறைவேற்றுவோம். தேவைப்பட்டால் கூடுதல் கால அவகாசம் கேட்டு குடியரசுத் தலைவருக்கு நான் கடிதம் எழுதுகிறேன்” என்று முதல்வர் கிரண்குமார் ரெட்டி கூறியதாக தெரிகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x