

மத்தியபிரதேசத்தில் மான்ட்சார் விவசாயிகள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையிலும், சர்வதேச யோகா தினத்தை அனுசரிக்கும் வகையிலும் காங்கிரஸ் கட்சியினர் சவாசனத்தில் ஈடுபட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
மத்தியபிரதேச மாநிலம் மான்ட்சாரில் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை வழங்கும்படியும், வேளாண் கடன் களை தள்ளுபடி செய்யக் கோரியும் விவசாயிகள் அண்மையில் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றபோது வன்முறை வெடித்த தால், துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. இதில் 6 விவசாயிகள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால், பதற்றம் நீடித்தது.
இதையடுத்து மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தும் வகை யில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் காலவரையற்ற உண்ணா விரதத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து, போபாலில் தனது போராட்டத்தை தொடங்கினார். ஆனால் 2-வது நாளிலேயே தனது போராட்டத்தை அவர் முடித்துக் கொண்டார். அதன்பின் விவசாயிகளின் படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்றும் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். இதையடுத்து மாநிலம் தழுவிய விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் மான்ட்சார் விவசாயிகள் படுகொலை சம்பவத்தை கண்டிக்கும் வகை யிலும், சர்வதேச யோகா தினத்தை அனுசரிக்கும் வகையிலும் காங் கிரஸ் கட்சியினர் நேற்று போபா லில் சவாசனத்தில் (சவம் போல படுத்து கிடப்பது) ஈடுபட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் அருண் யாதவ் கூறும்போது, ‘‘விவசாயிகளின் துயர நிலையை ஆளும் கட்சிக்கு உணர்த்தவே இத்தகைய நூதன போராட்டத்தை கையில் எடுத்தோம்’’ என்றார்.