பெண்ணைத் தாக்கிய வழக்கில் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா கைது

பெண்ணைத் தாக்கிய வழக்கில் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா கைது
Updated on
1 min read

இந்தி திரைப்பட தயாரிப்பாளர் வந்தனா ஜெயினை தாக்கிய வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா நேற்று பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். 3 மணி நேரத்தில் அவருக்கு ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து விடுதலை ஆனார்.

கடந்த செப்டம்பர் 25-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற ப‌யிற்சி முகாமில் இந்திய சுழற் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா பங் கேற்றார். அப்போது இந்தி திரைப் பட தயாரிப்பாளர் வந்தனா ஜெயின் அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு வந்தார். நண்பர்களான அமித் மிஸ்ராவும், வந்தனா ஜெயினும் பேசிக்கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது அமித் மிஸ்ரா வந்தனா ஜெயினை கடுமையாக தாக்கி, தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதையடுத்து வந்தனா ஜெயின் பெங்களூரு அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் அமித் மிஸ்ரா மீது வழ‌க்குப் பதிவு செய்தனர்.

கடந்த 20-ம் தேதி அசோக் நகர் போலீஸார், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமித் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பினர். நேற்று காலை அசோக் நகர் காவல் நிலையத்தில் அமித் மிஸ்ரா தனது வழக்கறிஞருடன் நேரில் ஆஜரானார். பெங்களூரு மாநகர துணை ஆணையர் சந்தீப் பாட்டீல் அவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் வந்தனா ஜெயின் தாக்கப்பட்டது உண்மையென தெரியவந்ததால் அமித் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். 3 மணி நேரத்துக்கு பிறகு அமித் மிஸ்ரா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பாக பெங்களூரு மாநகர துணை ஆணையர் சந்தீப் பட்டீல் கூறும்போது, ''அமித் மிஸ்ரா வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற வேண்டும். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமித் மிஸ்ராவுக்கு அதிகப்பட்சமாக 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்'' என்றார்.

ஜாமீன் கிடைத்ததையடுத்து, பெங்களூருவில் உள்ள கப்பன் பூங்கா காவல் நிலையத்திலிருந்து வெளியில் வரும் அமித் மிஸ்ரா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in