

காஷ்மீரில், சர்வதேச எல்லையில் கிராம மக்களுக்கு பதுங்கு குழிகள் கட்டிக் கொடுக்க அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.
எல்லையில் பாகிஸ்தான் கடந்த 9 நாட்களாக நடத்திய தாக்குதலில் எல்லை கிராம மக்கள் 8 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் துப்பாக்கி சூடு தொடர்பாக காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில், சர்வதேச எல்லையில் வசிக்கும் மக்கள், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் நேரங்களில் தங்களை தற்காத்துக் கொள்ள அப்பகுதிகளில் பதுங்கு குழிகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பதுங்கு குழிகள் மக்களால் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர எல்லை கிராமவாசிகளின், கால்நடைகளின் பாதுகாப்புக்காக அங்கு முகாம்கள் அமைக்கவும் அவற்றில் தீவனம், மருத்துவ சிகிச்சை ஏற்பாடுகளும் ஏற்படுத்தித் தரவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஜம்மு, சம்பா, ஹிராநகர், பிஷ்நாக் ஆகிய பகுதியில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டு முகாம்களில் உள்ள மக்களை ஒமர் அப்துல்லா சந்தித்து பேசினார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்து பொருட்கள் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.