தீவிரவாதி லக்வி ஜாமீன் விவகாரம்: பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவுத்துறை சம்மன்

தீவிரவாதி லக்வி ஜாமீன் விவகாரம்: பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவுத்துறை சம்மன்
Updated on
1 min read

மும்பைத் தாக்குதல் குற்றவாளி லக்வி மீதான தடுப்புக் காவலை ரத்து செய்த பாகிஸ்தான் உயர் நீதிமன்ற நடவடிக்கையை கண்டித்து அந்நாட்டு தூதருக்கு வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தீவிரவாதி லக்விக்கான காவலை ரத்து செய்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. இதனைக் கண்டித்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பசீதுக்கு வெளியுறவுத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங் கூறுகையில், "லக்வி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இந்தியாவை கவலையடைய செய்துள்ளது. மும்பைத் தாக்குலில் பலியான அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். இந்த தாக்குதல் நடந்து 6 வருடங்கள் ஆகியும் பாகிஸ்தான் நீதிமன்றம் இந்த வழக்கில் நியாயமான தீர்ப்பு வழங்காமல் இருப்பது வருந்தத்தக்கது. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் சொர்க்கமாக திகழ்ந்து வருகிறது" என்றார்.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட ஜகியுர் லக்விக்கு பாகிஸ்தான் தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி ஜாமீன் வழங்கியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், லக்வியை மேலும் 3 மாதங்களுக்கு சிறையில் அடைத்து வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.

மேலும் நீதிமன்றத்தின் ஜாமீன் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அந்நாடு தெரிவித்தது. இந்த நிலையில் பொது அமைதி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு விதிக்கப்பட்ட தடுப்புக் காவல் நீட்டிப்பை ஜகியுர் லக்வியின் தரப்பு எதிர்த்து கடந்த வெள்ளிக்கிழமை மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அதனை இன்று (திங்கட்கிழமை) விசாரித்த நீதிபதி நூர் உல் ஹக் கரூஷி, லக்வியின் தடுப்புக் காவலை ரத்து செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in