

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குழந்தைகள்கூட பிரதமரிடம் கேள்வி எழுப்ப முடியும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
மத்திய பிரதேசம் பாலகாட் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் அவர் பேசியது:
நாங்கள் இதுவரை அளித்த வாக்குதிகளை நிறைவேற்றியுள்ளோம். மக்கள வைத் தேர்தலின்போது தகவல் அறியும் உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தோம். அவற்றை இப்போது வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளோம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சிறு குழந்தைகள்கூட பிரதமரிடம் கேள்வி எழுப்ப முடியும்.
2008-ல் நடைபெற்ற மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.50,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என்று பாஜக உறுதியளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின் அந்த அரசு தன் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன்.
பிற்படுத்தப்பட்ட மக்கள், மலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்வி கற்று முன்னேறினால்தான் நாடு வல்லரசாக மாற முடியும். அதனால் ஏழை ஏளிய மாணவர்களின் கல்விக்கு காங்கிரஸ் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றார் ராகுல் காந்தி.