

தமிழகத்துக்கு வினாடிக்கு 6,000 கன அடி நீரை 27-ம் தேதி வரை திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாத வகையில், கர்நாடக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக அமைச்சரவைக் குழு முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை கர்நாடக சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டம் கூடியது. அதில், காவிரி நீரை குடிநீர் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரம், கர்நாடக மாநிலம் காவிரி டெல்டா பகுதிவாசிகளுக்கு குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய மட்டுமே தண்ணீர் உள்ளது. எனவே இத்தகைய நிலையில் தண்ணீரை வேறு பயன்களுக்கு திறந்து விட முடியாத நிலை உள்ளதை அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் சட்டப்பேரவைக் குழு தீர்மானித்துள்ளது.
செப்டம்பர் 23-ம் தேதி வரை 6,000 கன அடி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக மாநிலம் நடைமுறைப்படுத்தாது என்பது தெளிவாகியுள்ளது.
"கர்நாடக மாநிலத்தவரின் நலன் கருதியும், அவர்களது நலன்கள் தீவிரமாக பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை எம்.எல்.சி. ஏ.ரவி முன்மொழிய, மற்றொரு எம்.எல்.சி. வி.எஸ். உக்ரப்பா வழிமொழிந்தார்.
அந்தத் தீர்மான அறிக்கையை குழுவின் தலைவர் சங்கர மூர்த்தி வாசித்தளிக்க, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2016-17 நீராண்டில் கடுமையான போதாமை நிலவுவதாக தீர்மானத்தில் கூறியுள்ள சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம், உண்மையான பற்றாக்குறை நிலவரம் இந்தப் பருவம் முடியும் ஜனவரி 31, 2017-ல் தான் தெரியவரும் என்று கூறியுள்ளது. மேலும், கிருஷ்ண ராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி, கபினி நீர்த்தேல்க்கங்களில் நீரின் அளவு எச்சரிக்கை கொள்ளும் அளவுக்கு குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.