Last Updated : 01 Jan, 2016 08:13 AM

 

Published : 01 Jan 2016 08:13 AM
Last Updated : 01 Jan 2016 08:13 AM

மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் இளநிலை பணிக்கு நேர்முகத் தேர்வு ரத்து

புத்தாண்டு பரிசு என பிரதமர் மோடி அறிவிப்பு

*

மத்திய அரசு துறைகளில் இளநிலை பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடை முறை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.

இந்த புதிய நடைமுறை இளைஞர்களுக்கு மத்திய அரசு வழங்கும் புத்தாண்டு பரிசு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இளநிலைப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் முறைகேடுகள் நடைபெறு வதாக பல்வேறு தரப்பில் புகார்கள் எழுந்தன. இதை கடந்த சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டி னார்.

‘சி, டி பணியிடங்களை நிரப்பு வதற்கு நேர்முகத் தேர்வு நடத்தப் படுவதால் ஊழல் அதிகரிக்கிறது. அதிகார வர்க்கத்தால் ஏழைகள் சுரண்டப்படுகின்றனர், சில நேரங்களில் பணம் கொடுத்த பிறகும்கூட வேலை கிடைப் பதில்லை.

நேர்முகத் தேர்வின்போது சில நிமிடங்கள் மட்டும் ஒருவரிடம் பேசுவதைக் கொண்டு அவரது மனநிலையை கண்டறிய முடியாது. நேர்முகத் தேர்வை ரத்து செய்வதால் ஏழை இளைஞர்கள் பயன் அடைவார்கள். தரகர்களின் ஆதிக்கம் ஒழியும்’ என்று அப்போது அவர் தெரிவித்தார்.

பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து மத்திய அரசின் பி, சி, டி பிரிவு பணியிடங்களில் நேர்முகத் தேர்வை ரத்து செய்வது குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து பணியாளர் நலத் துறை சார்பில் மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் அண்மையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில்,

‘மத்திய அரசின் சி, டி மற்றும் கெஜட்டில் இடம்பெறாத பி பிரிவு, அதற்கு சமமான அனைத்து இளநிலை பணியிடங்களுக்கும் நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இனிமேல் எழுத்துத் தேர்வு மட்டுமே நடத்தப்பட வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. எனினும் திறனறி தேர்வு, உடல்தகுதி தேர்வு ஆகியவை தொடர்ந்து நடைபெறும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புத்தாண்டு பரிசு

டெல்லி - மீரட் இடையிலான 14 வழிச் சாலை திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நொய்டாவில் நேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

நேர்முகத் தேர்வு ரத்து செய்யப் பட்டிருப்பது இளைஞர்களுக்கு மத்திய அரசு வழங்கும் புத்தாண்டு பரிசாகும். இதன்மூலம் அரசுப் பணியிட தேர்வுகளில் ஊழல், முறைகேடுகள் ஒழிக்கப்படும்.

இனிமேல் அரசு பணிகளைப் பெறுவதற்கு தரகர்கள் உள்ளிட்ட யாரையும் இளைஞர்கள் நாட வேண்டிய அவசியம் இல்லை. தகுதி இருந்தால் அவர்கள் வீட்டுக்கு நேரடியாக பணி ஆணை அனுப்பி வைக்கப்படும்.

மத்திய அரசின் நேர்முகத் தேர்வு ரத்து திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் அமல்படுத்த வேண்டும். குறிப்பாக உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவிடம் இந்த யோசனையை முன்வைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x