

தெலங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி நேற்று ஒருங்கிணைப்பு கூட்டு குழுவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் அரசு பஸ், காவல் துறை வாகனங்கள் எரிக்கப்பட்டன.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களை பிரிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஜனகாமா பகுதியை தனி மாவட்ட மாக அறிவிக்க வலியுறுத்தி அப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில், நேற்று ஜனகாமா ஒருங்கிணைப்பு கூட்டு குழு என்கிற பெயரில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பாஜ உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹைதராபாத்-வாரங்கல் தேசிய நெடுஞ்சாலையில் இவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தெலங்கானா அரசு பஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். அந்த பஸ்ஸை தீயிட்டு கொளுத்தினர். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்த போலீஸார் மீதும் தாக்கு தல் நடத்தினர். இரண்டு போலீஸ் ஜீப்புகளும் கொளுத்தப்பட்டன.
தேசிய நெடுஞ்சாலையில் வந்த லாரிகள், தனியார் பேருந்துகள் உள்ளிட்ட 20 வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸார் ஆர்பாட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதுதொடர் பாக பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.