

தெலங்கானா, தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை கூட்டம் வியாழக்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை கூடியதும், வழக்கம்போல் தெலங்கானா விவகாரம் தொடர்பாக ஆந்திரப் பிரதேச உறுப்பினர்கள் கோஷமிட்ட னர். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும் பிரச்சினை பற்றி தமிழக எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து அவை நடவடிக்கைகள் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
மீண்டும் அவை கூடியபோதும் கூச்சல் குறையவில்லை. காங்கிரஸ் உறுப்பினர் கே.வி.பி.ராமச்சந்திர ராவ், தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் ஒய்.எஸ்.சவுத்ரி, சி.எம்.ரமேஷ் ஆகியோர் ஒன்றுபட்ட ஆந்திரத்தை வலியுறுத்தி கோஷமிட்டனர். தெலங்கு தேசம் உறுப்பினர் சுதா ராணி மற்றும் சில காங்கிரஸ் உறுப்பினர்கள், தெலங் கானாவுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.
தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக அதிமுக, திமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். இதையடுத்து மாநிலங்களவை கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.