

சங்கரராமன் கொலை வழக்கில் நாளை (நவம்பர்- 27-ல்) புதுச்சேரி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. வழக்கை விசாரித்த நீதிபதி சி.எஸ்.முருகன், தீர்ப்பை வழங்குகிறார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கணக்காளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை முடிந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதியன்று குற்றம்சாட்டப்பட்ட 23 பேரில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜயேந்திரர், விஜயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, கே.எஸ்.குமார் உள்பட 15 பேர் புதுச்சேரி அமர்வு நீதிமன்றத்தில்ஆஜராகினர். அப்போது, சங்கரராமன் கொலை வழக்கின் விசாரணை நீதிபதி சி.எஸ்.முருகன், இவ்வழக்கின் தீர்ப்பு நவ.12ல் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நவ.12ல் வழக்கை விசாரித்த நீதிபதி, " நவம்பர்-27-ஆம் தேதியன்று சங்கரராமன் கொலை வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும். அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்டோர் அனைவரும் ஆஜராக வேண்டும்" என்று தெரிவித்தார்.
அதன்படி, கடந்த 2005-ம் ஆண்டு முதல் புதுச்சேரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சங்கரராமன் கொலை வழக்கில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை தீர்ப்பு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.