

தமிழகத்தில் உச்ச நீதிமன்றத்தின் கிளை அமைக்க வேண்டும் என மாநிலங்களவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதை மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கொண்டு வந்த திமுகவின் மூத்த உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தினார்.
இது குறித்து திருச்சி சிவா பேசியதாவது: நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் காரணத்தால் நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கி உள்ளன. வாதி, பிரதிவாதிகள் மனஉளைச்சலில் சிக்கித் தவிக்கிறார்கள். நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்காக, ‘கொலிஜியம்’ எனும் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.
இது, சரிவர இயங்காத காரணத்தால் தான் நீதிபதி பணியிடங்கள் உரிய முறையில் நிரப்பப்படவில்லை. இதனை கவனத்தில் கொண்டு தான் மத்திய அரசு இதற்கானப் புதிய சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றியது. ஆனால், உச்ச நீதிமன்றமோ அதனை நிராகரித்து தீர்ப்பளித்து விட்டது அதன்பிறகு, அது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை மத்திய அரசு எடுக்காதது ஏன்?
நீதிபதிகளின் நியமனம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கக் கேட்டு நீதித்துறையில் இருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதங்கள் எழுதப்பட்டன. ஒன்பது மாநிலங்கள் மட்டுமே இதற்கு பதில் அளித்துள்ளன. தமிழகம் போன்ற பெரிய மாநிலங்கள் கூட இது தொடர்பாக எந்த பதிலும் அளிக்கவில்லை. நீதிபதி பணியிடங்களை விரைந்து நிரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதில், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், இதர பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கான ஒதுக்கீடுகள் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும்.
தென் மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் உச்ச நீதிமன்ற வழக்குகளுக்காக புதுடெல்லி வரை வந்து செல்ல வேண்டிய அலைக்கழிப்புகள் அதிகமாக உள்ளன. இதனை தவிர்க்க வேண்டியது அவசியம். இதற்காக, உச்ச நீதிமன்றத்தின் ஒரு தனி பெஞ்ச்சை தமிழகத்தில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 60 நாட்களாக வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதனால், நீதிமன்றங்களின் பணிகள் ஸ்தம்பித்து உள்ளன. மத்திய அரசாங்கமோ ‘இது நீதிமன்றங்கள் சார்ந்த விவகாரம்’ என ஒதுங்கிக் கொள்கிறது.
இது சரியல்ல. இதில் மத்திய அரசு ஒரு முடிவு எடுத்து பொதுமக்களின் அவலங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.