டெல்லிவாசிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச ஆய்வு, அறுவை சிகிச்சை: ஆம் ஆத்மி அரசு அறிவிப்பு

டெல்லிவாசிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச ஆய்வு, அறுவை சிகிச்சை: ஆம் ஆத்மி அரசு அறிவிப்பு
Updated on
1 min read

டெல்லிவாசிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக ஊடுகதிர் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அம்மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு இன்று அறிவித்தது.

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு சார்பில் கடந்த டிசம்பரில் இலவச சிகிச்சைக்கான ஒரு அறிவிப்பு அளிக்கப்பட்டது. இதில், இரு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தது. இதன்படி, இலவச சிகிச்சை பெற ஒருவர் தொடர்ந்து மூன்று வருடங்கள் டெல்லியில் வசித்திருக்க வேண்டும் எனவும், அவர்களின் வருமான வரம்பு வருடத்தில் 3 லட்ச ரூபாய் தாண்டக் கூடாது என்றும் தெரிவித்திருந்தது. ஆனால், இவ்விரு நிபந்தனைகளையும் இன்று விலக்கி டெல்லி அரசு புதிய அறிவிப்பு அளித்துள்ளது. இதை அம் மாநில அரசின் சுகாதார நலத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், முதல் அமைச்சர் கேஜ்ரிவால் முன்னிலையில் அளித்தார்.

'இந்த முக்கிய அறிவிப்பு டெல்லியில் மருத்துவ செலவு செய்ய முடியாத ஆயிரக்கணக்கான மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வசதி 21 தனியார் பரிசோதனையகங்கள், 21 மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்காக அவர்கள் ஒரு மாதத்திற்கும் அதிகமாக தனியார் மருத்துவமனைகளில் காத்திருக்க நேரிட்டால், வேறு 41 மருத்துவமனைகளில் அதை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான தொகையை டெல்லி அரசு அவர்களுக்கு திருப்பி அளித்து விடும்' எனத் தெரிவித்தார்.

இதன் துவக்க விழா நிகழ்ச்சி டெல்லி அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இலவச சிகிச்சைக்காக டெல்லி அரசு ஒப்பந்தம் இட்டுள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்து தேசிய மருத்துவமனைகள் அங்கீகரிப்பு வாரியத்தால் (என்.ஏ.பி.ஹெச்) அங்கீகரிக்கப்பட்டு, மத்திய அரசு அரசின் நலத்திட்டத்தில் (சி.ஜி.ஹெச்.எஸ்) பதிவு பெற்றவையாக உள்ளன. இவற்றில் ஊடுகதிர் பரிசோதனையில் எம்ஆர்ஐ, சிடி, பிஇடி ஸ்கேன் மற்றும் அல்ட்ரா சவுண்ட் வசதிகள் செய்யப்படும்.

இந்த விழாவில் பேசிய கேஜ்ரிவால் கூறுகையில், 'அரசியலில் நாம் கண்ட கனவு நிறைவேறி வருவதை இது காட்டுகிறது. எங்கள் அரசு ஆட்சிக்கு வந்தது முதல் மருந்துகளுடன், மருத்துவ ஆலோசனைக் கட்டணத்தையும் என்.ஏ.பி.ஹெச் மற்றும் சிஜி.ஹெச்.எஸ் வகை மருத்துவமனைகளில் இலவசமாக அளித்து வருகிறது. இதன்மூலம் அரசு மருத்துவமனைகளிலும் பெருங்கூட்டம் கூடுவது குறையும்' எனத் தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனைகளில் இந்த இலவசப் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சைக்கு ஒரே நிபந்தனையாக, அரசு மருத்துவமனைகளால் பரிந்துரைக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கான வருமான வரம்பும் விலக்கப்பட்டு அனைத்து தரப்பினருக்கு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி அரசால் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தெரு மருத்துவ ஆலோசனைகள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதற்கு அதில் பிரபல தனியார் மருத்துவர்களும் டெல்லி அரசால் அமர்த்தப்படுவது காரணம் ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in