சாதியை ஒழிக்காமல் தேசத்தை கட்டமைக்க முடியாது: பெங்களூருவில் அம்பேத்கரின் பேரன் பேச்சு

சாதியை ஒழிக்காமல் தேசத்தை கட்டமைக்க முடியாது: பெங்களூருவில் அம்பேத்கரின் பேரன் பேச்சு
Updated on
2 min read

சாதியை ஒழிக்காமல் ஒருங்கிணைந்த தேசத்தை கட்டமைக்க முடியாது என அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள 'இந்தியன் சோஷியல் இன்ஸ்டிடியூட்' சார்பாக ''தேசியவாதமும் எதிர்க்கொள்ளும் சவால்களும்'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதனை அம்பேத்கரின் பேரனும், பரிபா பகுஜன் மகாசங்க கட்சியின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பல்கலை கழக மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த கருத்தரங்கில் பிரகாஷ் அம்பேத்கர் பேசும்போது, "இந்தியாவில் முன்பை விட தற்போது தேசியவாதம் என்ற சொல் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட குழுவினரின் நம்பிக்கையை ஆட்சேபித்து கருத்து தெரிவித்தாலே தேசத்துக்கு எதிரான குற்றமாக கருதப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு பிடிக்காத உணவை சாப்பிட்டாலே தேசிய வாதத்தின் பெயரில் அடித்துக்கொல்லப்படுகிறார்கள். பிடிக்காத உடையையோ, பிடிக்காத வார்த்தையையோ பயன்படுத்தினால் கூட தாக்கப்படுகிறார்கள்.

ஜே.என்.யூ. விவகாரத்தில் ஏதோ கோஷம் எழுப்பியதற்காக கண்ணையா போன்ற மாணவர்கள் மீதே தேசத்துரோக வழக்கு போடப்படுகிறது.

நாட்டில் தேசியவாதம் என்ற சொல் மத ரீதியாகவும், மொழி ரீதியாகவும், சாதி ரீதியாகவும், வட்டார ரீதியாகவும் புரிந்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு தரப்பினரும் தாங்கள் உறுதியாக நம்பும் கருத்துக்கு மாற்றாக வேறொரு கருத்தை முன்வைத்தால் அது தேசத்துரோகம் என்கிறார்கள்.

ஏட்டளவில் ஜனநாயகத்தை பேணிக்காக்க முயற்சிப்போர் உண்மையிலே அதை செயலில் காட்ட மறுக்கிறார்கள்.

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை கடந்தும் இன்னும் சாதி, மத, மொழி, இன பிரிவினைகளை களையமுடியவில்லை. மக்களிடையே சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், ஒருங்கிணைந்த தேசியத்தையும் விதைக்கமுடியவில்லை.

ஒரே மதத்தை கடைப்பிடிப்பவர்களிடம் கூட சாதி உணர்வு வேரூன்றி இருக்கிறது. ஒரே சாதியை சேர்ந்தவர்களிடம் சடங்குகளின் வழியாக வேற்றுமை நிலவுகிறது.

சாதியை அழிக்காமல் மதத்தின் படிப்பினைகளை அழிக்க முடியாது. சாதியையும், மதத்தையும் அழிக்காமல் ஒருங்கிணைந்த தேசத்தை கட்டமைக்க முடியாது.

உண்மையில் தேசம் என்பது எல்லைக்கோடுகளால் ஆனது அல்ல. மக்களின் இதயங்களால் கட்டமைக்கப்பட்டது. இந்திய மனங்களில் காலங்காலமாக வேரூன்றி கிடக்கும் வேற்றுமைகளையும், போலி தேசிய வாதங்களையும் ஒழிக்காமல் புதிய பாதையை நாம் அடைய முடியாது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு போலி தேசிய வாதமும், இந்து தேசியவாதமும் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி விட்டது. இந்து மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் கொடுமையை சகித்துக்கொள்வதே தேசிய வாதம் என பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்'' என்றார்.

இதைத் தொடர்ந்து புதுச்சேரியை சேர்ந்த முனைவர் ஞான.ஆலாய்சியஸ், தேசியவாதம் குறித்து பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து சிறப்புரை ஆற்றினார்.

பிரெஞ்ச் புரட்சியில் தொடங்கி 18-ம் நூற்றாண்டில் திருநெல்வேலியில் சாலை கட்டுமானங்களில் ஒடுக்கப்பட்டோரை ஈடுபட வைத்தது, காலனி ஆட்சியில் கட்டமைக்கப்பட்ட தேசியவாதம், பூலே, அயோத்திதாச பண்டிதர், அம்பேத்கர் கட்டமைத்த தேசியவாதம் என பல தகவல்களை உள்ளடக்கி விரிவாக உரையாற்றினார்.

இதே போல இந்தியன் சோஷியல் இன்ஸ்டிடியூட் இயக்குநர் செல்வராஜ் அருள் நாதன் ''அம்பேத்கர் மற்றும் இந்திய தேசியவாதம்'',என்ற தலைப்பிலும், முனைவர் ஆம்ரோஸ் பின்ட்டோ ''இந்து தேசியவாதமும், பாஜகவும்'' என்ற தலைப்பிலும் , சென்னை ஐஎஸ்இடி இயக்குநர் லோகநாதன் ''இந்திய தேசியவாதம் எதிர்க்கொள்ளும் சவால்கள்'' என்ற தலைப்பிலும், முனைவர் மம்தா சாகர் கன்னட தேசியவாதம் என்ற‌ தலைப்பிலும்,

ஆய்வாளர் ஷார்தா ஷர்மா சாலியன் பெண் உடலும் தேசியவாதமும் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in