

கர்நாடகாவில் உள்ள அரசு மருத்துவமனையில் 71 வயதான நோயாளி எக்ஸ் - ரே அறைக்கு செல்வதற்கு வீல் சேர் தரப்படாததால் வயதான மனைவியே அவரை தரையில் இழுத்துச் சென்ற அவல சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவ வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஷிமோகாவை சேர்ந்தவர் ஆமீர் சாப் (71). ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட அவரை, மனைவி ஃபாமிதா (67) கடந்த 9 நாட்களுக்கு முன்பு ஷிமோகா அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதித்தார். மிகவும் மோசமான நிலையில் இருந்த அவருக்கு மருத்துவர்கள் சாதாரண அறையில் தங்க வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை அமீர்சாபுக்கு எக்ஸ் - ரே எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஃபாமிதாவிடம் தெரிவித்துள்ளனர். நடக்க முடியாமல் இருந்த அவரை அருகில் உள்ள எக்ஸ் - ரே மையத் துக்கு அழைத்துச் செல்ல உதவுமாறு மருத்துவமனை ஊழியர்களிடம் ஃபாமிதா மன்றாடியுள்ளார். ஊழியர்கள் உதவ மறுத்ததால், அருகில் இருந்த செவிலியரிடம் 'வீல் சேர்' (சக்கர நாற்காலி) தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு செவிலியர், “100 ரூபாய் கொடுத்தால் தான் வீல் சேர் தருவேன். ஸ்ட்ரெச்சர் வேண்டு மானால் ரூ. 150 தர வேண்டும்''என ஃபாமிதாவிடம் கேட்டுள்ளார். அதற்கு ஃபாமிதா, “என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. அவரால் எழுந்து நிற்ககூட முடிய வில்லை. அதனால் தான் வீல் சேர் கேட்கிறேன். அவரை தூக்கும் அளவுக்கு எனக்கு வலிமை இல்லை. இல்லாவிடில் நானே தூக்கி சென்று விடுவேன். தயவு செய்து வீல் சேர் தாருங்கள்” என கெஞ்சியுள்ளார்.
அப்போதும் செவிலியர் இரக் கப்படாததால் ஃபாமிதா தனது கணவரின் இரண்டு கால்களையும் பிடித்து தரையில் இழுத்து சென்றார். ஆமீர் சாபின் முதுகு தரையில் உராய்ந்ததால் அவர் வலியால் துடித்தவாறு கதறியுள்ளார். இதனை நேரில் கண்ட யாரும் அந்த தம்பதிக்கு உதவாமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.
இந்த அவல சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை கன்னட தொலைக்காட்சி சேனல்கள் நேற்று ஒளிபரப்பியதை தொடர்ந்து கர்நாடகா மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. இதற்கு காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களிலும் அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.