

சகிப்பின்மை குறித்த நடிகர் அமீர் கானின் கருத்து நாட்டிற்கும் அவருக்கும் இழுக்கு தேடித் தந்துள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
"அமீர் கானின் கூற்று அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம், ஆனால் நாட்டிற்கு அக்கருத்து பெரிய அளவில் இழுக்கு தேடித் தந்துள்ளது. ஒரு பிரபல கலைஞர் இவ்வளவு தீவிரமான கருத்தை வெளியிடுகிறார் என்றால் இதனால் பலரும் புண்படுவதும், வருத்தமடைவதும் தவிர்க்க முடியாததே.
அவரது கூற்றை ஏற்க முடியாததற்குக் காரணம், நம் நாடு சகிப்புத் தன்மைக்கான வரலாறு கொண்டது. இன்றும் சகிப்புத் தன்மை உள்ளது. அமீர் கானின் கருத்து நாட்டிற்கும், ஏன் அவருக்குமே கூட இழுக்கு தேடித் தந்துள்ளது" என்றார்.
பாஜக எம்.பி மற்றும் இந்துத்துவா தலைவர் யோகி ஆதித்யா நாத், “இந்தியாவை விட்டு அவர் செல்வதை ஒருவரும் தடுக்கவில்லை. மேலும், நாட்டின் மக்கள் தொகையை குறைக்க இது உதவும்” என்று தெரிவித்தார்.
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் செவ்வாயன்று கூறும்போது, “அமீர் கானும் அவரது மனைவியும் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டுக்கு செல்ல முடியும்? இந்தியாவை விட சிறந்த நாடு இல்லை. ஒரு இந்திய முஸ்லிமுக்கு ஒரு இந்துதான் நல்ல அண்டை வீட்டாளராக இருக்க முடியும். ஐரோப்பா மற்றும் முஸ்லிம் நாடுகளின் நிலைமைகள் என்ன? சகிப்பின்மை எல்லா இடங்களிலும் உள்ளது” என்றார்.
ஆனால் ராகுல் காந்தி, அமீர் கானுக்கு ஆதரவாகக் கூறும்போது, “கேள்வி கேட்பவர்களை தேசப்பற்று இல்லாதவர்கள், தேசத்துக்கு எதிரானவர்கள், தூண்டிவிடப்படுபவர்கள் என்றெல்லாம் முத்திரைக் குத்துவதை விடுத்து அவர்களை தொந்தரவு செய்வது என்பதை அறிய மக்களிடம் செல்ல வேண்டும்” என்றார்.