Last Updated : 18 Sep, 2016 12:13 PM

 

Published : 18 Sep 2016 12:13 PM
Last Updated : 18 Sep 2016 12:13 PM

எரிச்சலூட்டும் இணையவழி கேலிகள்

கணினியும் அதன் பயன்பாடும் அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும், ‘டுரோல்’ என்றால் இணையத்தில் பயன்படுத்தப்படும் கேலியான விமர்சனங்கள் என்ற உண்மையான பொருள், 3 ஆண்டுகளுக்கு முன்னால் வரையில் எனக்குத் தெரியாது. என்னுடைய சமூக அந்தஸ்து உயர்ந்து என்னைப் பலர் பின்தொடர்ந்து கண்டனங்களையும் விமர்சனங்களையும் வழங்கத் தொடங்கிய பிறகே அது விளங்கியது. அப்படி திட்டுவது அல்லது பாராட்டுவதும் உண்டு. பொதுவெளிக்கு வந்துவிட்டால் இவற்றைச் சகித்துக் கொண்டே ஆக வேண்டும் என்ற நியதி உலகம் முழுக்க ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவும் இதில் சேர்ந்துவிட்டது. மற்ற நாடுகளைவிட நாம் நன்றாகவே இதில் முந்திக்கொண்டிருக்கிறோம். காரணம் இங்கே பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் வார்த்தைப் பரிமாற்றங்களுக்கு வண்ணம் சேர்த்துக் கொண்டிருக்கின்றன!

‘மாமா’ என்று சொன்னால் ஏற்படும் குத்தல் ‘தரகன்’, ‘நாய்’ என்று சொல்லும்போது ஏற்படுவதில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன் அச்சில் வார்க்கத் தயங்கிய வசவுகள் எல்லாம் இப்போது சகஜமாக வார்த்தைகளாகவும் குறியீடுகளாகவும் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. இதற்கெல்லாம் காரணம் இணையவழித் தொடர்புதான் என்று முழுப் பழியையும் சமூக ஊடகங்கள் மீது போட்டுவிட முடியாது. உலகின் நாலாவது பெரிய தரைப்படையின் தளபதி முதல் மாநில முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் வரையில் இப்போது இணையவழித் தொடர்புதான் எதிரிகளை விமர்சிக்கவும் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கவும் ஆயுதமாகப் பயன்படுகிறது.

இதற்கு முன்னால் நான் வேலைபார்த்த பத்திரிகை அலுவலகத்தில் தொழிற்சங்கத்தினருடன் பேச வேண்டிய பொறுப்பும் எனக்குத் தரப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை பிற்பகல்களில்தான் ‘தேசிய நலன்’ தலைப்பிலான கட்டுரைகளை எழுதத் தொடங்குவேன். அப்போது பார்த்து அந்த தொழிற்சங்கத்தினர் நான் இருக்கும் அறைக்குக் கீழே திரண்டு நின்று, தங்களுடைய கோரிக்கைகளுக்காக, குறிப்பிட்ட இடைவெளியில் ‘ஒழிக’ ‘ஒழிக’ என்று கோஷமிட்டுக் கொண்டே இருப்பார்கள். கையில் வைத்திருக்கும் தாள வாத்தியங்களையும் பெரிய ஜால்ரா போன்றவற்றையும் காது கிழியும் அளவுக்கு நாராசமாக அடித்துக் கொண்டிருப்பார்கள். அலுவலக மேலாளரை அழைத்து, ‘காலமெல்லாம் நான் இவர்களுடன் மல்லுக்கட்ட வேண்டுமா?’ என்று கோபத்தில் வெடிப்பேன். அதற்கு அவர், ‘கவலைப்படாதீர்கள் அவர்கள் ஒவ்வொரு முறை ஒழிக என்று சொல்லும்போதும் உங்களுக்கு ஆயுளில் ஒரு நாள் கூடும்’ என்று சமாதானப்படுத்தினார். பொது விவாதத்தில் ஈடுபடாத இருவர், அதில் ஒருவர் பதிப்புத்துறையில் இருந்தால் அவரும் அவரைத் திட்டுபவரும் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் பேசிக்கொள்வதால் வசவுகள் இருவரோடு நின்றுவிடுகின்றன. நானும் அப்படிப் பல பேருடைய வசவுகளுக்கு ஆளாகியிருக்கிறேன். அவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் காங்கிரஸின் மூத்த தலைவர் மறைந்த அர்ஜுன் சிங். “உன்னுடைய பத்திரிகையின் அதிபர் ராம்நாத் கோயங்கா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் நீ ஒரு வாரம் கூட வேலையில் இருக்க மாட்டாய்” என்று மிரட்டுவார். “நீங்கள் மட்டுமல்ல, நாங்களும் கூட அவர் இல்லாமல் தவித்துப் போகிறோம். ஆனால் அவர் மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இல்லை, உங்களால் வேறு ஏதும் செய்ய முடியாது” என்று அடக்கமாக பதில் சொல்வேன். இந்த வாக்குவாதங்கள் வெளியாருக்குத் தெரியாது, அதே சமயம் கண்ணியமாக பேசப்படும். அதைவிட முக்கியம் இருவரிடையிலான தொடர்பும் அறுபட்டதில்லை.

‘உங்களுடைய பத்திரிகை நண்பர் தவ்லீன் சிங்கின் கால்கள் உடைக்கப்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல’ என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தொலைபேசி மூலம் வெடிப்பார். சில நிமிஷங்கள் பேசிய பிறகு கோபம் தணிந்து அப்படிப் பேசியதற்காக மன்னிப்பு கோருவார். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேவை ஒரு முறை, ‘மாஃபியா கும்பல் தலைவர்’ என்று எழுதிவிட்டேன். உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘என்னைத் திட்டினாலும் கவுரமாகத் திட்டியிருக்கிறாய், ஒரு நாள் என்னோடு சாப்பாட்டுக்கு வர முடியுமா?’ என்று கேட்டார். எனக்கு என்ன சாப்பிடப் பிடிக்கும், குடிக்கப் பிடிக்கும், குடிப்பேனா மாட்டேனா என்றெல்லாம் கேட்டார். பிறகு அவருடைய 80-வது பிறந்த நாளின்போது நீண்ட தொலைக்காட்சிப் பேட்டிக்கும் அது இட்டுச் சென்றது.

பத்திரிகையாளனுக்கு என்னதான் காண்டாமிருகத் தோல் இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தான். எனவே ஒருவர் திட்டினால், பதில் சொல்லாமல் எப்படிக் கடந்து செல்வது? உங்களை ஒருவர் திட்டுவதை வைத்து அவரைப் பற்றி உங்களுடைய பத்திரிகை ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ளலாமா அல்லது அவருடைய அரசியல் சித்தாந்தத்தை விமர்சிக்க முற்படலாமா என்று கேட்டால், ‘நிச்சயம் கூடாது’ என்றே சொல்வேன். வசவாளர்கள் என்போர் பத்திரிகைக்குக் கட்டுரை எழுதும்போது அறைக்குக் கீழே நின்றுகொண்டு ‘ஒழிக’ என்று கோஷமிட்ட தொழிற்சங்கத்தவர்களைப் போன்றவர்கள். அவர்கள் உண்மையில் நீங்கள் செத்துப்போக வேண்டும் என்று விரும்பவில்லை. அவர்களுடைய கோஷங்களுக்குப் பயந்து நீங்கள் உங்களுடைய வழிமுறைகளை மாற்றிக்கொண்டாலோ, கடுமையைக் குறைத்துக் கொண்டாலோ அவர்களுக்குப் போதும்; அவை கூட இல்லாவிட்டாலும் உங்களுடைய கவனம் சிதறி அன்றைய கட்டுரையைச் சிறிது தாமதப்படுத்தி எழுதித் தந்தாலும் அவர்களுக்கு அதில் சிறு வெற்றிதான். இந்த இம்சைகளால் பாதிக்கப்படாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் நல்ல கட்டுரையை எழுதி முடித்துவிட்டால் வெற்றி உங்களுக்குத்தான்! ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டும் சாந்தமான வழிமுறை இது அல்ல, ஆனால் எதிராளியை அலட்சியப்படுத்தி வென்றுவிடும் உத்தி.

நம் காலத்தில் வாழ்ந்த முரட்டுத்தனமான அரசியல்வாதிகளில் பன்சிலாலும் ஒருவர். அவரெல்லாம் இப்போதைய சமூக ஊடக காலத்தில் வாழ்ந்திருந்தால் எப்படியிருந்திருப்பார் என்று நினைத்துப் பார்க்கிறேன். வெறி பிடித்து எதிர்வினையாற்றியிருப்பாரா? நிச்சயம் கிடையாது. அந்தக் காலத்திலேயே அவர் நம்மிடம் சிரித்துப் பேசிக்கொண்டே நம்மைத் தண்டிக்க ஆள்களைத் தயார் செய்துவிடுவார்.

நாட்டின் தலைநகரமான டெல்லியிலேயே சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல் போன்றவை கொள்ளை நோய் போலப் பரவும் நிலையிலும் மெத்தனமாக இருக்கும் சுகாதாரத் துறையையும் அமைச்சகத்தையும் துள்ளி எழுந்து வேலைபார்க்க வைத்து பல உயிர்களைப் பிழைக்க வைக்கும், மேலும் பலர் நோயில் விழாமல் தடுக்கும் என்றாலும் அது நல்லதுதானே!

சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணைத் தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x