முல்லை பெரியாறு விவகாரத்தில் சமரசம் வேண்டாம்: கேரள முதல்வரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

முல்லை பெரியாறு விவகாரத்தில் சமரசம் வேண்டாம்: கேரள முதல்வரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
Updated on
1 min read

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள எதிர்க்கட்சிகள் இன்று முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்துப் பேசினர்.

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்தும், முதல்வர் பினராயி விஜயன் இது குறித்து கூறிய கருத்துகளினால் மக்களிடம் ஏற்பட்டுள்ள கவலைகளையும் எடுத்துக் கூற ஐக்கிய ஜனநாயக முன்னணித் தலைவர்கள் இன்று கேரள முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

முதல்வர் விஜயனைச் சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறும்போது, “முல்லை பெரியாறு குறித்த முதல்வரின் சமீபத்திய அறிக்கைகள் குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள கவலைகளை அவரிடம் தெரிவித்தோம். மேலும் அணையின் பாதுகாப்பு விவகாரத்தில் எந்த வித சமரசத்துக்கு இடமில்லை என்று அரசிடமிருந்து உத்தரவாதம் கோரியுள்ளோம்” என்றார்.

அதாவது முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் முந்தைய அரசின் நிலைப்பாட்டையே இடதுசாரி அரசும் தொடர வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறித்தியுள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே உள்ள முல்லை பெரியாறு வழக்கு பலவீனமடையும் விதமாக எந்த விதமான நடவடிக்கையையும் புதிய அரசு மேற்கொள்ளக் கூடாது என்பதை முதல்வர் விஜயனுக்கு தாங்கள் அறிவுறுத்தியதாக சென்னிதலா மேலும் தெரிவித்தார். அதாவது, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக அதிகரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை இருந்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கை பலவீனப்படுத்தும் நிலைப்பாட்டினை எடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தியதாக சென்னிதலா கூறியுள்ளார்.

மேலும், புதிய அணையைத் தங்கள் அரசு எதிர்க்கவில்லை என்பதையும், அணையின் உறுதி குறித்து சர்வதேச நிபுணர் குழுவின் ஆய்வுக்கு தயாராக இருப்பதாகவும் முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறியதை சென்னிதலா வரவேற்பதாக தெரிவித்தார்.

"தமிழகத்துடன் சுமுகமான உறவுகளையே தாங்கள் விரும்புகிறோம். ஆனாலும், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள மாநிலத்தின் நலன் மற்றும் அணையின் பாதுகாப்பு விவகாரத்தில் எந்த வித சமரசமும் சாத்தியமில்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்” என்றார் சென்னிதலா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in