

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கடந்த 9 ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் பெண் துறவி சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்கு ஜாமீன் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள மாலேகான் எனும் இடத்தில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 80 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண் துறவி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் முன்னாள் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.,) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கீழ் நீதிமன்றங்களில் பிரக்யா சிங், புரோகித் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் இருவரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
மனுக்கள் மீது நேற்று விசாரணை நடத்திய நீதிபதிகள் ரஞ்சித் மோர் மற்றும் ஷாலினி பன்சால்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, சாத்வி பிரக்யா சிங்குக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், ரூ.5 லட்சம் பிணைத் தொகை செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேநேரம், பிரசாத் புரோகித்தின் மனுவை அவர்கள் தள்ளுபடி செய்தனர்.இதன் மூலம் கடந்த 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த பிரக்யா சிங், விரைவில் விடுதலை ஆகிறார்.
அதேநேரம், பாதிக்கப்பட்டவர் களின் தரப்பில் கூறும்போது, பிரக்யாவுக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்ப தாகத் தெரிவித்தனர்.