Published : 22 Dec 2013 05:50 PM
Last Updated : 22 Dec 2013 05:50 PM

ஊழலை ‘ஊழலே’ விமர்சிப்பதா?- காங்கிரஸ் மீது மோடி தாக்கு

ஊழல் குறித்து ஊழலின் மொத்த உருவமான காங்கிரஸே பேசுவதா என்று குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக சார்பில் ‘மகா கர்ஜனை’ என்ற பெயரில் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்றார். இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். இந்தக் கூட்டத்தில், ஊழல் குறித்து ராகுல் காந்தி அண்மையில் பேசியதை மோடி மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.

“மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் ஊழலை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் சனிக்கிழமை கூறினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மும்பை பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:

காங்கிரஸின் மிகப் பெரிய தலைவர் ஒருவரின் பேச்சைக் கேட்டேன். அவர் ஊழலை எதிர்த்து ஆவேசமாகப் பேசினார். ஊழலில் திளைக்கும் கட்சியைச் சேர்ந்த அவர், ஊழலை எதிர்த்துப் பேசியது வேடிக்கையாக உள்ளது. ஊழலின் மொத்த உருவமே காங்கிரஸ்தான். அப்படியிருக்கும்போது அவரால் எப்படி ஊழலை எதிர்த்துப் பேச முடிகிறது என்பது புரியவில்லை.

ஆதர்ஷ் ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையில் மாநில அமைச்சர்களின் பெயர்கள் உள்ளன. அந்த அமைச்சர்களைக் காப்பாற்ற மகாராஷ்டிர அரசு தீவிரமாக முயற்சிக்கிறது. மறுபக்கம் மூத்த காங்கிரஸ் தலைவர் ஊழல் ஒழிப்பு குறித்து நீண்ட சொற்பொழிவு ஆற்றுகிறார்.

ஆதர்ஷ் அறிக்கையில் 3 முன்னாள் முதல்வர்களின் பெயர்கள் உள்ளன. அவர்கள் அனைவரும் காங்கிரஸ் தலைவர்கள். அதனால் அந்த அறிக்கையை மகாராஷ்டிர அரசு நிராகரித்துள்ளது. பொதுவாக ஊழல் விவகாரங்களில் காங்கிரஸ் கட்சியின் சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக உள்ளது.

காங்கிரஸின் பிரித்தாளும் சூழ்ச்சி

மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியை ஆங்கிலேயர்களிடம் இருந்து காங்கிரஸ் நன்றாகக் கற்று வைத்துள்ளது. அதைப் பின்பற்றி மதரீதியாக மக்களைப் பிரித்து வாக்கு வங்கி அரசியலை அந்தக் கட்சி நடத்தி வருகிறது.

நாடு இப்போது எதிர்கொண்டிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலக் காரணம் காங்கிரஸ்தான். இதேநிலை நீடித்தால் ஒரு பிரச்சினையில்கூட தீர்வு காண முடியாது. வாக்கு வங்கி அரசியலை ஓரம் கட்டிவிட்டு வளர்ச்சி அரசியலில் நாம் காலடி வைத்தால்தான் நாடு முன்னேறும்.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்தி வெற்றி கண்டோம். இப்போது காங்கிரஸிடமிருந்து நாட்டை விடுவிக்க மக்கள் புதிய இயக்கத்தை நடத்த வேண்டும். புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

2014-ல் நடைபெற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது கட்சியின் சார்பில் வாக்கு கோருவதை நாங்கள் விரும்ப வில்லை. இந்தியாவுக்காக வாக்களியுங்கள். இந்திய மக்களை ஒன்றுபடுத்துவதற்காக வாக்களியுங்கள். வாரிசு அரசியல், ஊழல், பணவீக்கம், திறமையற்ற நிர்வாகம் ஆகியவற்றுக்கு எதிராக வாக்களியுங்கள்.

மதரீதியாகப் பிரிக்கும் காங்கிரஸ்

ஆரம்பகாலம் முதலே சிறுபான்மை வாதம், மதவாதம் ஆகியவைதான் காங்கிர ஸின் பாரம்பரிய கொள்கையாக இருந்து வருகிறது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் 90 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து மிகப் பெரிய திட்டங்களை நிறைவேற்றப் போவதாக 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் அண்மையில் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, கடந்த 3 ஆண்டுகளில் 90 மாவட்டங்களிலும் இதுவரை ஒரு பைசாகூட செலவிடப்படவில்லை என்று மத்திய அரசு பதிலளித்துள்ளது. இதுதான் உண்மையான காங்கிரஸ். இதுதான் அவர்களின் வாக்கு வங்கி அரசியல்.

ஒரு கும்பல் இந்தியாவைச் சுரண்டி சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். சிறு குழந்தையிடம் கேட்டால்கூட இந்த உண்மையைக் கூறிவிடும். அந்த கருப்புப் பணம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். இங்கு ஏழை மக்களுக்காக தாராளமாக செலவிடப்பட வேண்டும்.

அத்வானியின் தலைமையில் அனைத்து பாஜக எம்.பி.க்களும் கட்சித் தலைவர்களும் தங்களுக்கு வெளிநாடுகளில் பணம் இல்லை என்று எழுத்துபூர்வமாக உறுதியளித்துள்ளனர்.

இந்த நேரத்தில் காங்கிரஸுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். சுவிட்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள இந்திய கருப்புப் பணத்தை கொண்டு வர காங்கிரஸ் அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும். சிறப்புக் குழுவை நியமிக்க வேண்டும்.

நிச்சயமாக இந்த நடவடிக்கையை அவர்கள் தொடங்கமாட்டார்கள். ஏனென்றால் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை குவித்து வைத்திருப்பதே அவர்கள் கட்சிக்காரர்கள்தான்.

மக்களின் மனதில் இருக்கிறேன்

என் படத்தையோ பேச்சையோ டி.வி.க்களில் ஒளிபரப்பக்கூடாது என்று காங்கிரஸ் சார்பில் நிர்பந்தம் அளிக்கப் படுவதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் நண்பர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். டி.வி. திரைகளில் நீங்கள் என்னை மறைக்கலாம். ஆனால் நாட்டு மக்களின் இதயங்களில் நான் வீற்றிருக்கிறேன். எனக்கு அதுபோதும். நாம் எப்போதோ சுதந்திரம் அடைந்துவிட்டோம், ஆனால் இதுவரை திறமையான நல்ல ஆட்சியைப் பெற வில்லை. திறமையற்ற அரசு நிர்வாகம்தான் நாடு இப்போது எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய பிரச்சினை.

1960-ல் மகாராஷ்டிரமும் குஜராத்தும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. அதன்பின்னர் குஜராத்தில் 14 முதல்வர்கள் ஆட்சி நடத்தியுள்ளனர். ஆனால் மகாராஷ்டிரத்தில் 26 முதல்வர்கள் மாறி மாறி ஆட்சியில் அமர்ந்துள்ளனர். நான் குஜராத்தை பற்றி பேசினால் சிலருக்கு வயிற்றுவலி வந்துவிடும். எனவே மத்தியப் பிரதேசத்தை பற்றி கூறுகிறேன். அங்கு 3-வது முறையாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியில் அந்த மாநிலம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸின் திறமையற்ற ஆட்சியால் விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எல்லை சோதனை சாவடி வரி மூலம் குஜாரத் அரசு ரூ.1,033 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மகாராஷ்டிரத்தில் எல்லை சோதனை சாவடி வரிப் பணம் எங்கே என்று மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.

குஜராத்தில் சர்தார் சரோவர் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தால் மகாராஷ்டிரத்துக்கு ஆண்டுக்கு ரூ.400 கோடி மதிப்பில் இலவசமாக மின்சாரம் வழங்கப்படும். ஆனால், அந்தத் திட்டத்தை மத்திய அரசு முடக்கி வருகிறது.

நிர்வாகத் திறனற்ற அரசு என்பது நீரிழிவு நோய்க்கு ஒப்பானது. அந்த நோய் மேலும் பல்வேறு நோய்களுக்கு வித்திட்டுவிடும் என்றார் நரேந்திர மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x