Published : 10 Jun 2016 09:16 AM
Last Updated : 10 Jun 2016 09:16 AM

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட கலைப்பொருட்களை மீட்க பிரதமர் மோடி முயற்சி

இந்தியாவில் இருந்து திருடி வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட கலைப்பொருட்களை மீட்க பிரதமர் நரேந்திர மோடி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற மோடியிடம் சாமி சிலைகள் உட்பட 200 கலைப் பொருட்களை அந்த நாட்டு அரசு ஒப்படைத்தது. இதில் சென்னை சிவன் கோயிலில் இருந்து திருடப் பட்ட 2000 ஆண்டு பழமையான மாணிக்கவாசகர் சிலை மற்றும் தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான வெண்கல விநாயகர் சிலைகளும் அடங்கும்.

அவை பல்வேறு கால கட்டங்களில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டவை ஆகும். அமெரிக்க சுங்கத் துறை அதிகாரிகளின் சோதனைகளில் கைப்பற்றப்பட்ட இந்த கலைப் பொருட்கள் வாஷிங்டன் கருவூலத் தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந் தன. மத்திய அரசின் நடவடிக்கை யால் தற்போது அவை அனைத்தும் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட இந்திய கலைப்பொருட்களை மீட்க கடந்த 2003-ம் ஆண்டு முதலே மோடி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 2003-ல் அவர் குஜராத் முதல்வராக இருந்தார். அப்போது மாநில முதல்வராக பல்வேறு நாடுகளுக்குச் சென்ற அவர் இந்திய கலைப்பொருட்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டார்.

கடந்த 2003-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகருக்கு மோடி சென்றார். அந்த நாட்டில் இந்திய சுதந்திர போராட்ட தலைவர் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா வாழ்ந்தார். குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர் 1930-ல் அங்கேயே உயிரிழந்தார்.

சுவிட்சர்லாந்து பயணத்தின் போது அவரது அஸ்தியை மற்றும் அவரது மனைவியின் அஸ்தியை மோடி பெற்று குஜராத்துக்கு கொண்டு வந்து சம்பிரதாய சடங்குகளைச் செய்தார்.

கடந்த 2014 மே மாதம் இந்திய பிரதமராக மோடி பதவியேற்றார். அப்போது 11-ம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சேர்ந்த நடராஜர் சிலையையும் 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சிலையை யும் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டார். இவை இரண்டும் தமிழகத்தில் இருந்து கடத்தப் பட்டவை ஆகும்.

கடந்த 2015 ஏப்ரலில் கனடா சென்ற பிரதமர் மோடி, கஜுராஹோ வில் இருந்து கடத்தப்பட்ட 900 ஆண்டு பழமையான சிலையை மீட்டு வந்தார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன்பேரில் 10-ம் நூற்றாண்டை சேர்ந்த துர்கா சிலையை ஜெர்மன் அரசு திருப்பி அளித்தது. இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x