

திருப்பதி ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் அறை அருகே உபயோகமில்லாத நிலையில் நீர்தேக்கத் தொட்டி உள்ளது. நேற்று காலை இந்த தொட்டியில் 3 இளைஞர்களின் சடலங்கள் மிதப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்த பயணிகள் போலீஸா ருக்கு தகவல் அளித்தனர்.
ரயில் நிலையத்தில் சடலங்கள் இருந்ததால் இது தொடர்பாக விசாரணை நடத்துவதில் ரயில்வே போலீஸாருக்கும், திருப்பதி போலீஸாருக்கும் இடையே இழுபறி நீடித்தது. இதனால் 4 மணி நேரம் வரை நீர்தேக்கத் தொட்டியில் இருந்து சடலங்கள் மீட்கப்படாமல் இருந்தன.
இறுதியில் திருப்பதி போலீ ஸார் சடலங்களை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் 3 இளைஞர்களும் திருப்பதி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து விடுதலையானவர்கள் என்றும் ரயில் நிலையத்தில் தண்ணீர் பாட்டில்கள் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர் என்றும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞர் ஒருவரின் முகத்தில் காயங்கள் காணப்படுவதால் மூவரும் கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.